கள்ளக்குறிச்சி பள்ளியில் 8 வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்கலாம்: உயர்நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி பள்ளியில் 5-ம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை நேரடி வகுப்பு தொடங்கலாம் என்று உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூரில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை மாதம் 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சின்னசேலம் காவல் துறையினர், மாணவியின் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மாணவியின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகமே காரணம் என்று பெற்றோர் குற்றம்சாட்டினர். இதையடுத்து மாணவியின் உறவினர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே மாதம் 17 ஆம் தேதி ஏராளமான இளைஞர்களும், அப்பகுதி மக்களும் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டம் கலவரமாக மாறி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் 20-க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகளை தீ வைத்து எரித்தனர். வகுப்பறைகள் அலுவலக அறைகள் என அனைத்தையும் சூறையாடிய போராட்டக்காரர்கள், நாற்காலிகள் மேசைகளை அடித்து நொறுக்கினர்.

இதனைத்தொடர்ந்து 5 நாட்களாக மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டி நடத்தப்பட்ட போராட்டம், கலவரமாக மாறியது. பள்ளி வளாகத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள், வாகனங்களுக்கு தீயிட்டு எரித்தனர். இதனால் சூழல் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் தரப்பில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பின்னர் கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு மாணவியின் தாயார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதே நேரத்தில் பள்ளி நிர்வாகமும் தனது வாதங்களை முன் வைத்தது.

மாணவர்களின் அச்சத்தை போக்க 2 மருத்துவர்களின் உளவியல் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. ஏற்கனவே 9-முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஒரு காவல் உதவி ஆய்வாளர், 2 காவலர்கள் ஊதிய அடிப்படையில் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். 9-ம் வகுப்பு முதல் நேரடி வகுப்புகள் தொடங்கிய பின் பள்ளியில் சுமுகமான நிலைமை நிலவுகிறது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதனிடையில் 9-12 வகுப்பு வரை நேரடி வகுப்புகள் செயல்படலாம் என்று உத்தரவிட்டுள்ளது. இந்திலையில் கள்ளக்குறிச்சி பள்ளியில் 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கலவரம் காரணமாக மூடப்பட்ட பள்ளியை திறக்கக் கோரி நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்.கே.ஜி. முதல் 4-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை தொடங்குவது குறித்து 6 வாரத்துக்கு பின் முடிவு செய்யப்படும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.