இந்திய அரசாங்கத்தின் சட்டத்தை எப்போதும் விமர்சனம் செய்யக்கூடாது. எந்த சட்டமும் 100 சதவீதம் முழுமையானது இல்லை என்பது உண்மை என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
சென்னை ராஜ்பவனில் இன்று ‘எண்ணித்துணிக’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் இந்திய குடிமைப் பணி நேர்முக தேர்வை எதிர்கொள்ள உள்ள 80 பேருடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அவர் பேசியதாவது:-
குடிமைப் பணிகளுக்கு தேர்வாகும் உங்களுடைய பர்சனாலிட்டி மிக முக்கியம். நீங்கள் பார்ப்பதற்கு நன்றாக இருக்கவேண்டும். பல அதிகாரிகளையும், மக்களையும் சந்திப்பவர்களாக நீங்கள் இருப்பீர்கள். எனவே, சிரித்த முகமாகவும் இருக்கவேண்டும். ஆண்கள் கோட்சூட் எடுத்திருப்பீர்கள் என நம்புகிறேன். விரைவில் அதனை எடுத்து அணிந்து பழகுங்கள். பெண்கள் எப்படியும் சேலை தான் அணிவீர்கள். சேலை அணியத் தெரியாதவர்கள் சீக்கிரம் அதற்கு பழகிக்கொள்ளுங்கள். கேள்விகளுக்கு அவசரமாக பதில் அளிக்க வேண்டாம் நிதானமாக பதில் அளியுங்கள். நீங்கள், நீங்கள் தான். நீங்கள் மற்றவர்கள் அல்ல. நீங்கள் மற்றவர்கள் கருத்தை கேட்கலாம். ஆனால் உண்மையை சொல்ல வேண்டும். உங்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நன்றாக கேள்வியை உள்வாங்கிக் கொண்டு பதில் சொல்ல வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பார்வை இருக்கும். உங்களுடைய எண்ணங்களும், பார்வைகளும் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அரசாங்கம் என்ன முடிவு எடுக்கிறதோ, அதனை அமல்படுத்துவது மட்டும் தான் இந்திய குடிமைப் பணி அதிகாரியாக உங்களுடைய கடமை. இந்திய அரசாங்கத்தின் சட்டத்தை எப்போதும் விமர்சனம் செய்யக்கூடாது. எந்த சட்டமும் 100 சதவீதம் முழுமையானது இல்லை என்பது உண்மை. ஒரு விஷயத்தைப் பற்றி, ஒரு பிரபலம் கருத்து சொல்கிறார் என்பதால் அது உண்மையாக இருந்து விடமுடியாது. அவர் எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும், அது அவருடைய பார்வை அவ்வளவு தான்.
ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறில்லை, அதை அரசியலாக்கும்போதுதான் பிரச்னை. ஒன்றிய அரசு என்ற பிரச்னை பற்றி தமிழகத்தை தாண்டி யாருக்கும் தெரியாது. பண மதிப்பிழப்பால் உலகின் பெரிய டிஜிட்டல் வர்த்தக நாடாக இந்தியா உள்ளது. பெண்கள் முன்னேறி வரவில்லை என்றால் நாடு முன்னேற்றம் அடையாது. அதனால் தான் பிரதமர் மகளிருக்காக பல திட்டங்களை முன் எடுக்கிறார். ஹிந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என சொல்ல வேண்டியதில்லை. அதனை தெரிந்து கொள்வதால் என்ன நன்மை என்று சொல்லலாம். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருமொழிக் கொள்கை இருந்தாலும், மூன்றாவதாக ஒரு மொழி கற்றுக் கொள்வது நல்லது தான். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள் கேட்ட கேள்விகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- யு.பி.எஸ்.சி. எந்த மாதிரியான அதிகாரிகளை தேர்ந்தெடுக்கிறது.
பதில்:- யு.பி.எஸ்.சி. குடிமைப் பணிகளுக்கான அதிகாரிகளைத் தான் தேடுகிறது. ஒரு சமூக ஆர்வலர் யு.பி.எஸ்.சி.க்கு தேவையில்லை. ஒரு விவகாரம் குறித்து என் கருத்தைக் கேட்டால் அதனை நான் தருவேன். ஆனால், இறுதி முடிவு எனது கருத்துக்கு எதிராக இருந்தாலும், அதனை அமல்படுத்துவது தான் என் கடமை. என் கருத்துக்கு எதிராக முடிவெடுத்த மேல் அதிகாரியின் முடிவின் மீது நான் கோபப்படமுடியாது.
கேள்வி:- பணமதிப்பு நீக்கம் நல்லதா? கெட்டதா?
பதில்:- உச்சநீதிமன்றம் சொன்ன சட்டப் புள்ளியை நீங்கள் பார்த்தால் அது சரிதான் என்று உங்கள் பதில் இருக்கும். பணமதிப்பு நீக்கத்தின் தாக்கத்தில், சில வணிகங்கள் விநியோகிக்கப்பட்டு விட்டன, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவாக டிஜிட்டல் மற்றும் பல இ-காமர்ஸ்கள் வந்துள்ளன. உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் வர்த்தக நாடாக இந்தியா இப்போது உள்ளது. முடிவு எடுக்கும்போது, தற்காலிக தவிர்க்க முடியாதது நடக்கும், சில எதிர்மறை அம்சங்களும் இருக்கும், நீண்ட காலத்தில், பணமில்லா பொருளாதாரத்தை உருவாக்கி, மிகப்பெரிய டிஜிட்டல் பரிவர்த்தனை நாடாக மாற்றியுள்ளோம்.
கேள்வி:- மாநில அரசும், மத்திய அரசும் இருவேறு கருத்துகள் நிலவும்போது, என்னிடம் கருத்து கேட்கப்பட்டால் நான் யார் பக்கம் நிற்கவேண்டும்?
பதில்:- மாநில அரசு, மத்திய அரசு என்று வரும்போது சந்தேகமே இல்லை; இந்திய குடிமைப் பணிகள் அதிகாரிகள் மத்திய அரசின் மூலம், மத்திய அரசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்கள் மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் கேட்க வேண்டும். இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.