பிரதமர் மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு பதவியேற்றது முதல் தற்போது வரை தனது சொந்த மருத்துவ தேவைகளுக்காக ஒரு ரூபாய் கூட அரசின் பணத்தை செலவிடவில்லை என்பதும், அத்தகைய செலவுகளை தானே ஏற்றுக்கொண்டு வருவதும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
பிரதமர் மோடி தனக்கான மருத்துவ செலவுகளுக்காக இதுவரை எவ்வளவு ரூபாய் செலவு செய்துள்ளார் என்பது குறித்து புனேவை சேர்ந்த சமூக ஆர்வலர் பிரபுல் சர்தா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக பிரதமர் அலுவலகத்திடம் கேள்வி எழுப்பி இருந்தார். இதில், பிரதமர் மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு பதவியேற்றது முதல் தற்போது வரை தனது சொந்த மருத்துவ தேவைகளுக்காக ஒரு ரூபாய் கூட அரசின் பணத்தை செலவிடவில்லை என்பதும் அத்தகைய செலவுகளை தானே ஏற்றுக்கொண்டு வருவதும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. பிரதமர் அலுவலகம், அளித்துள்ள பதிலில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றது முதல் தற்போது வரை தனக்கான மருத்துவ செலவுகளை தானே ஏற்றுக்கொண்டு இருப்பதாகவும், இதற்காக அரசு ஒரு ரூபாயைக் கூட செலவு செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.
இது தொடர்பாக சமூக ஆர்வலர் பிரபுல் சர்தா கூறும் போது, ” ஃபிட் இந்தியா இயக்கம் மூலம் மக்களுக்கு வலுவான செய்தியை அளிப்பதோடு, தானே முன் உதாரணமாக இருந்து ஆரோக்கியமாக இருப்பது குறித்து 135 கோடி மக்களையும் மோடி ஊக்குவித்து வருகிறார். வரி செலுத்துபவர்களின் பணம் எதுவும் பிரதமர் அலுவலகத்தின் தனிப்பட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படவில்லை. இது நிர்வாகத்தின் மீதான நமது நம்பிக்கையை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதே வழியை அனைத்து எம்.பிக்களும் எம்.எல்.ஏக்களும் பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர்கள், எம்.பிக்களுக்கு ஊதியத்தை தாண்டி பல்வேறு சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. பதவிக் காலத்தில் இலவச ரயில் பயணம், வீட்டு வாடகைப்படி, மருத்துவப் படி, தொலைபேசி இணைப்பு உள்ளிட்ட பல சலுகைகளும் வழங்கப்படுகின்றன எனினும், பிரதமர் மோடி தனக்கான மருத்துவ செலவுகளைக் கூட தனது சொந்த செலவில் ஏற்றுக்கொண்டு இருப்பதை பலரும் வரவேற்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.