கவர்னர் ரவியை தகுதி நீக்கம் செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி நாராயணசாமி கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா உடல் நலக்குறைவால் கடந்த 4-ந்தேதி இறந்தார். அவரது திடீர் மரணம் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவருடைய மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது தந்தையும், காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநில தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை, ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள குடியரசு இல்லத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி நாராயணசாமி, நடிகர் சத்தியராஜ், புதுவை காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியம், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் குலாம் மொய்தீன் ஆகியோர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். இதைத்தொடர்ந்து நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மிகப்பெரிய ஜனநாயக படுகொலை நடந்திருக்கிறது. தமிழக முதல் -அமைச்சர் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட உரை கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு அவர் ஒப்புதலும் கொடுத்து இருக்கிறார். அதற்கு பிறகு சட்டமன்றத்தில் கவர்னர் அந்த உரையை திருத்தி தன் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி படித்திருக்கிறார். இது இந்திய அரசியலமைப்பிற்கு மிக எதிர்மறையான ஒரு செயல். குறிப்பாக கவர்னர் ரவி இந்திய ஜனநாயகத்தையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையும் மதிக்கவில்லை. அவர் தான்தோன்றித்தனமாக அந்த உரையை படித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சட்டமன்றத்தில் முதல் -அமைச்சர் மிக தைரியமாக தீர்மானம் கொண்டு வந்திருக்கின்றார். அவருக்கு பாராட்டுக்களை தெரிவிக்கின்றேன். ஜனநாயக மாண்பை காக்கும் வகையில் அந்த தீர்மானம் இருக்கின்றது. கவர்னர் தன்னுடைய எல்லைக்கு மீறி செயல்படக்கூடாது. கவர்னர்கள் மத்திய நரேந்திர மோடி அரசின் கைப்பாவையாக செயல்பட்டு எதிர்மறையான அரசியலை செய்கின்ற வேலையை பார்க்கின்றனர். கவர்னருக்கு என்று சில அதிகாரம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் டாக்டர் அம்பேத்கரால் கொண்டுவரப்பட்டுள்ளது. அதை கவர்னர் மீறி செயல்படுவது ஜனநாயகத்திற்கு புறம்பானது. கவர்னர் தான் ஒப்புதல் அளித்த உரையை படிக்காமல் தன்னிச்சையாக தன்னுடைய உரையை அவர் படித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. பல கவர்னர்கள் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட ஒப்புதல் அளித்த உரையைத்தான் படித்தார்களே தவிர இதுபோன்ற ஒரு தரம் கெட்ட வேலையை எந்த கவர்னரும் செய்யவில்லை. இதை கவர்னர் ரவி செய்திருக்கின்றார். கவர்னராக இருக்க அவர் தகுதி அற்றவர். எனவே உடனடியாக அவரை தகுதி நீக்கம் செய்வதற்கு தமிழக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.