ராஜபக்சே சகோதரர்கள் கனடாவிற்குள் நுழைய தடை!

இலங்கையில் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே உள்ளிட்ட 4 பேர் கனடா நாட்டுக்குள் நுழைவதற்கு அந்நாடு அதிரடி தடை விதித்துள்ளது.

இலங்கையில் சர்வதேச சட்டவிதிகளின் படி தனி தேசிய இனமான ஈழத் தமிழர்கள் தங்களுக்கு சுய நிர்ணய உரிமை கோரி போராடினர். இதனையடுத்து தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்தினர். தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையிலான இந்த ஆயுதப் போராட்டம் 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் என்ற பெயரில் லட்சக்கணக்கான அப்பாவி ஈழத் தமிழர்களை கொன்று குவித்தது இலங்கை ராணுவம். குறிப்பாக 2009-ம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நீதி கோரி சர்வதேச விசாரணை மற்றும் மனித உரிமை அமைப்புகளை தமிழர் தரப்பு வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் இலங்கை தமிழர் இனப்படுகொலை நிகழ்த்தியதற்காக ஜனாதிபதிகளக இருந்த மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே உள்ளிட்ட 4 பேர் கனடாவுக்குள் நுழைவதற்கு அந்நாடு அதிரடி தடை விதித்துள்ளது. கோத்தபாய, மகிந்த ராஜாக்சே இருவரும் ஜனாதிபதிகளாக இருந்தனர். பின்னர் மகிந்த ராஜபக்சே பிரதமரானார். கோத்தபாய ஜனாதிபதியானார். இருவரும் பதவியில் இருந்த போது, இலங்கையில் பொருளாதார நெருக்கடி உச்சத்தை எட்டியது. இதனால் மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். மக்கள் புரட்சியை எதிர்கொள்ள முடியாமல் மகிந்த, கோத்தபாய ராஜபக்சே இருவரும் பதவியில் இருந்து விலகி உயிருக்கு அஞ்சி தப்பி ஓடினர். இந்த நிலையில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக ராஜபக்சே சகோதரர்களான கோத்தபாய, மகிந்த ராஜபக்சேக்களுக்கு கனடா அதிரடி தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கனடாவில் உள்ள 4 பேரின் சொத்துக்கள் மற்றும் நிதி செயல்பாடுகள் முடக்கப்படும் என அறிவித்துள்ளது. விடுதலை புலிகளுக்கு எதிரான போரின்போது மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக 4 பேர் மீதும் கனடா நாடு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.