ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

46 வயதே நிரம்பிய ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா, கடந்த 4ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்தார். இது தமிழக அரசியலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரை பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து ஜனவரி 5ஆம் தேதி இறுதிச் சடங்குகள் நடைபெற்று திருமகன் ஈவேரா உடல் தகனம் செய்யப்பட்டது. இவருக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நேற்றைய தினம் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தொகுதி காலியாக இருக்கும் தகவலை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பி வைப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் அடுத்த 6 மாதங்களுக்குள் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.