ஆன்லைன்தடை சட்டத்திற்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும், மாற்று வழிகளை தமிழக அரசு ஆராய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டம் பனகுடி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.15 லட்சத்தை இழந்த சிவன்ராஜ் என்ற பட்டதாரி நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டது வேதனையளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு நிகழ்ந்த 40-ஆவது தற்கொலை இதுவாகும். பட்டதாரி இளைஞர் சிவன்ராஜ் பெரும் பணத்தை இழந்த நிலையில், அவரது தந்தை, வீட்டு உடமைகளையும், கால்நடையையும் விற்றுக் கொடுத்த ரூ. 1 லட்சத்தையும் சூதாடி இழந்துள்ளார். ஆன்லைன் சூதாட்டம் இளைஞர்களை எந்தளவுக்கு அடிமையாக்குகிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.
சிவன்ராஜை போன்று ஏராளமான இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த உண்மைகளை அறிந்தும் ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுனர் காலதாமதம் செய்து வருவது கண்டிக்கத்தக்கது. ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் இனியும் தொடரக்கூடாது. எனவே, தடை சட்டத்திற்கு ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசியலமைப்பு சட்டத்தின் 162-ஆவது பிரிவை பயன்படுத்துவது உள்ளிட்ட மாற்று வழிகளை தமிழக அரசு ஆராய வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ஸ்ரீரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். கூலி தொழிலாளி. இவரது மகன் சிவன்ராஜ் (வயது34). பட்டதாரி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது செல்போனில் ஆன்லைன் ரம்மி என்ற தளத்தை பதிவிறக்கம் செய்து விளையாட தொடங்கினார். அவ்வப்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டில் விளையாடி சிறு சிறு தொகையை வென்று வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஒரு பெரிய தொகையை வைத்து விளையாடிதாக கூறப்படுகிறது. அதில் சிவன்ராஜ் தன்னுடைய மொத்த தொகையும் இழந்துள்ளதாக தெரிகிறது. பின்னர் நாம் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தான் விட்ட பணத்தை எப்படியாவது வென்று விட வேண்டும் என்று தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி விளையாடியதாக தெரிகிறது. அதிலும் சிவன்ராஜ் தான் விளையாண்ட விளையாட்டிலும் தோல்வியுற்று தான் கடன் வாங்கிய பணத்தையும் இழந்துள்ளார். அதன்படி மொத்தம் ரூ.15 லட்சம் இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று மனமுடைந்து தனது ஊரின் அருகே உள்ள தோட்டத்திற்கு சென்று பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கி அதில் குளிர்பானம் கலந்து குடித்தார். பின்னர் மயங்கிய நிலையில் இருந்த சிவன்ராஜ்ஜை அக்கம், பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.