திமுகவில் இருக்கும் பெரும்பாலானவர்கள் தமிழர்களே இல்லை. அவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள். அவர்களின் தாய்மொழி தெலுங்கு. ஆளுநர் ஆர்என் ரவியை அவமானப்படுத்தியதை பார்த்து கொண்டு இருக்காமல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அரசை 1991ல் அரசியலமைப்பு சட்டம் 356-வது பிரிவை பயன்படுத்தி நான் டிஸ்மிஸ் செய்தது போல் இப்போது ஸ்டாலின் அரசை பிரதமர் மோடி டிஸ்மிஸ் செய்ய வேண்டும் ” என பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி ஆக்ரோஷமாக கூறியுள்ளார்.
2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று திமுக தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்றியது. திமுக ஆட்சி அமைந்த நிலையில் தமிழகத்தின் ஆளுநராக ஆர்என் ரவி நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் தான் ஆர்என் ரவிக்கும், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கும் இடையே சுமூகமான உறவு என்பது இல்லை. துவக்கம் முதலே மோதல் போக்கு நீடித்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு திராவிட மாடல் எனவும், திராவிட கொள்கை என பேசி வரும் நிலையில் ஆளுநர் ஆர்என் ரவி தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் திராவிடத்துக்கு எதிராகவும், சனாதானம் பற்றியும் பேசி வருகிறார்.
இந்நிலையில் தான் சமீபத்தில் ஆளுநர் ஆர்என் ரவியை திரும்பபெற வேண்டும் என திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு கையெழுத்து கடிதம் அனுப்பி உள்ளனர். இதற்கிடையே தான் சமீபத்தில் ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், ‛‛தமிழ்நாட்டை தமிழகம் என சொல்வதே சரியானதாக இருக்கும்” என ஆர்என் ரவி பேசினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் உள்பட பல்வேறு அமைப்பினர் ஆளுநரின் பேச்சுக்கு எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதற்கிடையே தான் நேற்று முன்தினம் சட்டசபை கூட்டத்தொடரை நேற்று ஆளுநர் ஆர்என் ரவி தொடக்கி வைக்கும் வரையில் உரையாற்றினார். அப்போது தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட அச்சிடப்பட்ட உரையை முழுமையாக படிக்காமல் சில பகுதிகளை விட்டுவிட்டு படித்ததாகவும், உரையில் இல்லாத சில விஷயங்களை படித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சட்டசபையிலேயே வைத்து முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். ஆளுநர் ஆர்என் ரவிக்கு வழங்கப்பட்ட அச்சிடப்பட்ட உரையை மட்டும் அவைகுறிப்பில் இடம்பெற செய்ய வேண்டும். அவர் கூறிய பிற விஷயங்களை இடம்பெற செய்யக்கூடாது என தீர்மானம் வாசித்தார். இதுபற்றி அறிந்த ஆளுநர் ஆர்என் ரவி சட்டசபையில் இருந்து பாதியில் வெளியேறினார். தேசியக்கீதம் இசைக்கப்படும் முன்பு அவர் வெளியேறியது தவறானது என திமுக உள்பட பல கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக சட்டசபையில் நடந்த இந்த நிகழ்வு தற்போது பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. இந்த விஷயத்தில் பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் ஆளுநருக்கு ஆதரவான கருத்துக்களையும், பிற கட்சியினர் மற்றும் அமைப்பினர் ஆளுநருக்கு எதிரான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் இந்த மோதல் தற்போது ஆளுநருக்கு எதிராகவும், ஆதரவாகவும் தமிழகத்தின் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தான் பாஜகவின் மூத்த தலைவராக உள்ள சுப்பிரமணியன் சாமி இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-
ஆளுநர் ஆர்என் ரவி தமிழ்நாட்டை தமிழகம் என சொல்வது சிறந்ததாக இருக்கும் என கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் அறிக்கை அல்லது சட்ட மாற்றம் கொண்டு வரவில்லை. ஆளுநர் ஆர்என் ரவி செய்தது பரிந்துரை மட்டுமே. இதனை திமுகவால் பொறுத்து கொள்ள முடியவில்லை. திமுகவில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் இல்லை. அவர்கள் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள். அவர்களின் தாய்மொழி தெலுங்காக உள்ளது.
தமிழ்நாடு என்ற பெயர்சூட்டுவதற்கான சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அப்போது திமுகவின் முன்னாள் முதல்வர் சிஎன் அண்ணாதுரை ஒன்றை தெளிவாக குறிப்பிட்டார். தமிழ்நாடு என்றால் மாநிலம் தான். அது தனி நாடு இல்லை கூறினார். திமுகவின் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஆர்என் ரவி ஆளுநர் தான். சட்டசபையில் இப்படி நடந்து கொண்டது அவமானத்துக்குரியது. இதற்கு முன்பு இப்படி நடந்தது இல்லை. இது சரியான செயல் என நான் நினைக்கவில்லை. ஆளுநர் முட்டுக்கட்டை போடுகிறார் என நினைத்தால் அவர்கள் ஜனாதிபதியிடமும், பிரதமர் நரேந்திர மோடியிடமும் பேசலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் இதுபற்றி சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டும் செய்துள்ளார். அதில், ‛‛கடந்த 1991ல் மூத்த கேபினட் அமைச்சராக நான் இருந்தேன். அப்போது கருணாநிதி தலைமையிலான அரசை அரசியலமைப்பு சட்டம் 356-வது பிரிவை பயன்படுத்தி நான் டிஸ்மிஸ் செய்ய வைத்தேன். அதேபோல் பிரதமர் மோடி அரசு செய்ய வேண்டும். நமது ஆளுநரை திமுக அரசு அவமானப்படுத்துவதை மோடி அரசு அனுமதிக்க கூடாது” என தெரிவித்துள்ளார்.