மருத்துவ கவுன்சில் தேர்தல் வழக்கு: தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க உத்தரவு!

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை நடத்த ஏதுவாக, 1914 ஆம் ஆண்டு பழைய சட்டத்துக்கு பதில், அவசர சட்டம் பிறப்பிக்கப்படுமா என்பது குறித்து ஜனவரி 23 ஆம் தேதி விளக்கம் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடக் கோரிய வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, பழமையான 1914 ஆம் ஆண்டு சட்டப்படி தேர்தல் நடத்தப்படுவதால், சட்டத்தில் மூன்று மாதங்களில் திருத்தம் கொண்டு வர தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, அதுவரை தேர்தலை தள்ளி வைக்கவும், மின்னணு முறையில் தேர்தல் நடத்துவது குறித்து பரிசீலிக்கவும் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பிலும், தற்போதைய நிர்வாகிகள் சார்பிலும் மேல் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்குகள், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக் காலம் பிப்ரவரி 16 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதாகவும், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சட்டத்தின்படியே தேர்தல் நடத்தப்பட்டு உள்ளதாகவும், பிப்ரவரி மாதத்துக்குள் அரசு சட்டம் கொண்டு வந்தால் எந்த பிரச்னையும் இல்லை என, மருத்துவ கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் என்பது ஏழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கவே நடத்தப்படுவதாகவும், இதற்கும் நியமன உறுப்பினர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து, சட்டத்தில் முழுமையாக திருத்தம் செய்து அவசர சட்டம் பிறப்பிக்கப்படுமா என்பது குறித்து ஜனவரி 23 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.