கோவில்களில் முதல் மரியாதை வழங்க கூடாது. மேலும் ஏதேனும் அடையாளம் அடிப்படையில் குறுிப்பிட்ட நபரின் அந்தஸ்தை உயர்த்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது. தலைப்பாகை அணியவோ, குடை பிடிக்கவோ கூடாது என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாகோட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமங்களில் உள்ள கோவில்களில் முதல் மரியாதை வழங்கும் நபர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. திருவிழா மற்றும் பொங்கல் சமயங்களில் கோவிலுக்கு வரும் நபர்களுக்கு முதல் மரியாதை வழங்கப்படும் முறை நடைமுறையில் உள்ளது. இது மக்களை பாகுபடுத்தும் வகையில் இருப்பதாக சிலர் கருதினர். இதனால் கோவில்களில் முதல் மரியாதை அளிக்க கூடாது. இதனை கைவிட வேண்டும் என அவர்கள் விரும்பினர். அதன்படி சிவகங்கை மாவட்டம் மல்லாகோட்டை கிராம கோவில்களில் முதல் மரியாதை வழங்க எதிர்ப்பு தெரிவித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. பொங்கல் விழாவில் கோவில்களில் முதல் மரியாதை வழங்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. அதன்படி கோவில்களில் முதல் மரியாதை வழங்கவோ, தலைப்பாகை அணியவோ, குடை பிடிக்கவோ கூடாது. ஏதேனும் அடையாள அடிப்படையில் குறிப்பிட்ட நபரின் அந்தஸ்தை உயர்த்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது என உத்தரவு பிறப்பித்தது.