ராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்க கோரி பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில் மத்திய பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் கூடுதல் கால அவகாசம் வழங்கியுள்ளது.
சேது சமுத்திர திட்டமானது தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் ராமர் பாலத்தை இடித்து சேதுக் கால்வாய் திட்டம் அமைப்பதாக கூறி மத்திய அரசு இத்திட்டத்தை கைவிட்டது. இதனைத் தொடர்ந்து ராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கில் மத்திய பாஜக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மத்திய அரசும் ராமர் பாலம் தொடர்பாக பதிலளிக்க தொடர்ந்து கால அவகாசம் கோரியிருந்தது. இன்றும் இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச்சிடம் சுப்பிரமணியன் சுவாமி முறையிட்டார். அப்போது மத்திய அரசு தரப்பில், ராமர் பாலம் குறித்த வழக்கில் பிரமாண பத்திரம் தயாராக உள்ளது. துறைசார் இலாகாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. 4 வாரங்களுக்குள் மத்திய அரசு பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், பிப்ரவரி முதல் வாரத்தில் பதில் மனுத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு அவகாசம் கொடுத்து வழக்கை ஒத்திவைத்தது.
ராமர் பாலத்தை முன்வைத்துதான் சேது சமுத்திர திட்டம் அல்லது சேது கால்வாய் திட்டம் முடக்கப்பட்டது. அண்மையில் மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில், ராமர் பாலம் என்பது இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முட்டுக்கட்டை நீங்கியது. இதனை சுட்டிக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தினர். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலினும் சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கோரியிருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டசபையில் இன்று சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற கோரும் தீர்மானத்தை முதல்வ மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இத்தீர்மானத்தை தமிழ்நாடு பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் வரவேற்பதாக பேசினார். அதிமுகவும் வரவேற்றது. இதையடுத்து சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற கோரும் தீர்மானம் தமிழ்நாடு சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது. இந்த நிலையில்தான் உச்சநீதிமன்றத்தில் ராமர் பாலம் வழக்கும் விசாரணைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.