சேது கால்வாய் திட்டத்தை பொறுத்தவரை 150 ஆண்டுகால கனவுத் திட்டம் என்றும், இதனை போராடியும் வாதாடியும் நிறைவேற்ற வைப்பது தனக்கிருக்கும் வரலாற்றுக் கடமை எனவும் முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசியுள்ளார். இது மட்டுமல்லாமல் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றிட, ஒன்றிய அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்ற தீர்மானத்தையும் கொண்டு வந்து அதை ஒரு மனதாக நிறைவேற்றவும் செய்துள்ளார்.
சேது சமுத்திரத் திட்டம் குறித்த அரசின் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:-
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே! 150 ஆண்டு காலக் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டுமென்ற தீர்மானத்தை இம்மாமன்றத்தில் முன்மொழிவதை வரலாற்றுக் கடமை என்று நான் கருதுகிறேன். பேரறிஞர் அண்ணா அவர்களுடைய கனவுத் திட்டம் அது. முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றப் பாடுபட்ட திட்டம் அது. பாக் நீரினையையும், மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் ஆடம்ஸ் பாலத்தின் குறுக்கே வெட்டப்பட வேண்டிய கால்வாயின் பெயர்தான் சேதுசமுத்திரத் திட்டம். இந்தியாவினுடைய முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு தலைமையில் 1963 ஆம் ஆண்டு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில் இடம்பெற்ற திட்டம் இது. 1967 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், ‘தம்பிக்கு’ எழுதிய மடலில் இத்திட்டதை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள். ‘சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றினால், வர்த்தகம் பெருகும். இலங்கையைச் சுற்றிக் கொண்டு கப்பல் போக வேண்டிய நீளம் குறையும். இங்கேயுள்ள மீனவர்களின் வாழ்வு செழிக்கும். தமிழ்நாடு எல்லா வளமும் கொண்ட நாடாக மாறும்’ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதினார்கள். இத்திட்டத்தை நிறைவேற்றித் தருவதற்கு எழுச்சி நாள் கொண்டாடுவது என்றும் அறிவித்தார்கள்.
1972 ஆம் ஆண்டு தூத்துக்குடி துறைமுக நுழைவு வாயிலில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் சிலையைத் திறந்து வைக்க பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் வந்தபோது, அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் இதனை வலியுறுத்தினார். தூத்துக்குடி துறைமுகத்தின் பயன் மேலும் வளர வேண்டுமானால், சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் மிகமிக அவசியம் என்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் வலியுறுத்திப் பேசினார்கள்.
1998 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்கள், இத்திட்டத்துக்கான திட்டப் பணிகளுக்காக நிதியினை ஒதுக்கினார். பா.ஜ.க. ஆட்சியில்தான் சேதுசமுத்திரத் திட்டத்துக்கான பாதை எது எனத் தீர்மானிக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு ஒன்றிய அளவில் ஆட்சி மாறி, காங்கிரஸ் தலைமையில் தி.மு.க.வை உள்ளடக்கிய கூட்டணி ஆட்சி மலர்ந்த பிறகு 2,427 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, திட்டப் பணிகள் பாதியளவு முடிந்த நிலையில், அரசியல் காரணங்களுக்காக பா.ஜ.க. சார்பில் இத்திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது என்பதும், இத்திட்டத்தை ஆரம்பம் முதல் ஆதரித்து வந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் அம்மையார் அவர்கள் திடீரென நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு இத்திட்டத்துக்கு எதிராக வழக்குப் போட்டார் என்பதையும் இம்மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.
இந்த அரசியல் முட்டுக்கட்டை போடும் செயல் மட்டும் நடக்காமல் இருந்தால் இத்திட்டம் தொடங்கப்பட்டு பத்தாண்டு காலத்தில் ஏராளமான பயன் கிடைத்திருக்கும்.முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சுட்டிக் காட்டியதைப் போல, நாட்டினுடைய அந்நியச் செலாவணி வருவாய் அதிகரிக்கும்; தமிழ்நாட்டிலே தொழில் வணிகம் பெருகும்; கப்பல்களின் பயண தூரம், நேரம் பெருமளவு குறையும்; தமிழ்நாடு மற்றும் அண்டை மாநில துறைமுகங்களில் சரக்குகளைக் கையாளும் திறன் அதிகரிக்கும்; சிறுசிறு துறைமுகங்களை உருவாக்க முடியும்; சேதுக் கால்வாய் திட்டத்தின்கீழ், மீன்பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்படுவதால், கடல்சார் பொருள் வர்த்தகம் பெருகி, அதன் காரணமாக மீனவர்களுடைய பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் உயரும்.
மீனவர்களுடைய பாதுகாப்பைக் கணக்கில் கொண்டுதான் இந்தத் திட்டத்தினுடைய காரியங்கள் நடைபெறுகின்றன. மன்னார் வளைகுடாவில் இருந்து பாக் கடல் சென்று வர மீனவர்களுக்கு இந்தக் கால்வாய் வசதி அளிக்கும். இலங்கை உள்ளிட்ட வேறு நாடுகளின் துறைமுகங்களில் இந்திய சரக்குகள் பரிமாற்றம் செய்வது தடுக்கப்படும். நாட்டின் கடலோரப் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும். இத்திட்டத்தினால் மிக முக்கியமாக, ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு தொடர்ந்து கிடைக்கும். இவை எல்லாம்தான் அப்போது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சுட்டிக்காட்டியவை. இவை அனைத்தும் நடந்திருக்கும். நடக்காமல் போனதற்கான அரசியல் காரணங்களை நான் விரிவாகப் பேச விரும்பவில்லை.
தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால கனவு திட்டமான சேது சமுத்திரத் திட்டம் தொடர்புடைய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்துவோம் என்று ஒன்றிய பா.ஜ.க. அரசு சொல்லி இருக்கிறது. ஆனால் ”ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதை கூறுவது கடினம்” என்று ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார். இத்தகைய நிலைப்பாட்டுக்கு பா.ஜ.க. அரசு வந்துள்ள நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தைப் போராடியும் வாதாடியும் செயல்படுத்த வைக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்தத் தீர்மானத்தை இப்பேரவையின் சார்பில் நிறைவேற்றித் தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்!
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே! சேது சமுத்திரம் திட்டம் தொடர்பான தீர்மானத்தை நான் இப்பொழுது முன்மொழிகிறேன். ”தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்பெறச் செய்வதற்கு மிக இன்றியமையாத திட்டமாக சேது சமுத்திரத் திட்டம் விளங்கி வருகின்றது. 1860 ஆம் ஆண்டு 50 லட்சம் ரூபாயில் கமாண்டர் டெயிலர் என்பவரால் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம் இது. அதன்பிறகு 1955-ல் தமிழ்நாட்டின் சிறந்த நிபுணர் டாக்டர் ஏ.இராமசாமி முதலியார் குழு, 1963-ல் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம், 1964-ல் அமைக்கப்பட்ட டாக்டர் நாகேந்திரசிங், ஐ.சி.எஸ் தலைமையிலான உயர்நிலைக் குழு – ஆகிய பொறியியல் வல்லுநர்களால் பல்வேறு ஆண்டு காலம் ஆராய்ந்து வடிவமைக்கப்பட்டதுதான் சேது சமுத்திரத் திட்டமாகும்.
இதன் வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது பிரதமராக இருந்த மாண்புமிகு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் “Feasibility Study”-க்கு அனுமதியளித்தார்கள். அப்போதுதான் சேதுசமுத்திரத் திட்டத்தின் வழித்தடம் எது என்பதும் இறுதி செய்யப்பட்டது. பின்னர் ஒன்றியத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றது.
திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால் 2004 ஆம் ஆண்டு 2,427 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவராக இருந்த அன்னை சோனியா காந்தி அவர்களும் முன்னிலை வகிக்க இந்தத் திட்டத்தை பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் 2-7-2005 அன்று துவக்கி வைத்தார்கள். திட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை தலைநிமிர வைக்கும் இத்திட்டத்துக்கு, குறிப்பாக தென் மாவட்டங்களைச் செழிக்க வைக்கக்கூடிய இந்தத் திட்டத்துக்கு, தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய இந்த சேது சமுத்திரத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. எந்தக் காரணத்தைக் கூறி முட்டுக்கட்டை போடப்பட்டதோ, அதையே நிராகரிக்கக்கூடிய வகையிலே, தற்போது “இராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதைக் கூறுவது கடினம்” என்று ஒன்றிய அமைச்சர் மாண்புமிகு ஜிதேந்திர சிங் அவர்கள் நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார்.
இப்படி ஒன்றிய அரசு தெரிவித்துள்ள நிலையில், சேது சமுத்திரத் திட்டத்தை இனியும் நிறைவேற்றாமல் இருப்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு – வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நிகழ்வாகவே கருதி, இந்த மன்றம் கவலை தெரிவிக்கிறது. இனியும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவிடாமல் சில சக்திகள் முயல்வது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்று இந்த மாமன்றம் கருதுகிறது. எனவே, மேலும் தாமதமின்றி இந்த முக்கியமான சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றிட, ஒன்றிய அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்றும், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு அனைத்து ஒத்துழைப்பையும் நல்கும் என்றும் இந்த மாமன்றம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது. இந்த தீர்மானத்தை அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று அனைவரையும் கேட்டு அமைகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.