தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கொடுத்த மனுவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் ஒப்படைத்தோம் என திமுக எம்பிக்கள் குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என நீட் தேர்வு விலக்கு மசோதாவை கிடப்பில் போடப்பட்ட போதே எழுந்தது. நீட் விலக்கு மசோதா மட்டுமல்லாமல் நிறைய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமலும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமலும் காலம் தாழ்த்தியுள்ளார் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. அது போல் மிகவும் முக்கியமான மசோதாவான ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவையும் கிடப்பில் போட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் எத்தனை உயிர்கள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உள்ளது. இதனால்தான் இந்த மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கேட்டு வருகிறார்கள். மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி பிரிவினையை தூண்டுவது போல் பேசுகிறார் என்றும் அவர் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் கடந்த 9ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் அரசு தயாரித்துக் கொடுத்த உரையை முழுமையாக படிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தமிழ்நாடு, திராவிட மாடல், மதநல்லிணக்கம், சமத்துவம், சமூகநீதி, பல்லுயிர் ஓம்புதல், பெண்ணுரிமை உள்ளிட்ட வார்த்தைகளையும் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி ஆகியோரின் பெயர்கள் இருந்த பத்தியை தவிர்த்துவிட்டார். அது போல் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்பதையும் அவர் விட்டுவிட்டார். இதனைக் கண்டித்து முதல்வர் ஸ்டாலின் அவையில் தீர்மானத்தை வாசித்தார். அதில் ஆளுநர் படித்த உரை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்றும் அவர் முழுமையாக படிக்காதது தனக்கு வருத்தமளிப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதை அறிந்து கொண்ட ஆளுநர் தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே பாதியிலேயே வெளியேறினார்.
தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, ஆ. ராசா தலைமையில் என்.ஆர்.இளங்கோ, டி.ஆர். பாலு, வில்சன் உள்ளிட்டோர் ஆளுநர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று காலை 11.30 மணிக்கு சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு திமுக எம்பி டி.ஆர். பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஆளுநர் உரையின் போது சில வார்த்தைகளை தவிர்த்ததும் சில வார்த்தைகளை அவரே சேர்த்ததும் மரபுவுக்கு மீறிய செயல் என்றோம். மேலும் ஆளுநர் அவை மரபுகளை மீறிவிட்டார். தேசிய கீதம் பாடும் முன்பே அவர் வெளியேறியது தமிழ்நாடு சட்டசபையையும் தமிழ்நாடு மக்களையும் அவமதிக்கும் செயல். எனவே முதல்வர் ஸ்டாலின் கொடுத்துள்ள மனுவை படித்து பார்த்துவிட்டு உங்கள் மனதிற்கு பட்ட முடிவை எடுங்க என சொல்லியுள்ளோம். மேலும் முதல்வர் ஸ்டாலின் கொடுத்த மனு சீலிடப்பட்ட ஒன்றாகும். அதில் என்ன கோரிக்கை இருந்தது என தெரியாது. ஆனால் ஆளுநர் விவகாரம் என்பது மட்டுமே எங்களுக்கு தெரியும். இவ்வாறு டி.ஆர்.பாலு தெரிவித்தார்.