பள்ளிக் கல்வியில் கலை, பண்பாட்டை ஒருங்கிணைப்பதால் மாணவர்களின் சிந்தனை திறன் அதிகரிக்கும் என்றும், மாணவர்கள் அறிவு கலை அறிவாக, கல்வி அறிவாக, பகுத்தறிவாக வளர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கலைத் திருவிழா நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் கலைத் திறனைக் கண்டறிந்து, வெளிக்கொண்டு வரும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் கலைத் திருவிழா நடத்தப்பட்டன. நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நடனம், நாடகம், இசை, கட்டுரை எழுதுதல், ஓவியம், கதை எழுதுதல், சிற்பம் செய்தல், பேச்சுப் போட்டி, இசைக் கருவி வாசித்தல், திருக்குறள் ஒப்பித்தல் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட கலைத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
மாணவர்களின் கலைத் திறனையும் அறிவுத் திறனையும் அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. நாளைய தமிழ்நாட்டை காக்கும் லட்சியவாதிகளாய் மாணவர்கள் இருக்கப் போகிறார்கள். பல்லாயிரக்கணக்கானோருடன் போட்டி போட்டு நீங்கள் பெற்றுள்ள வெற்றிக்கு துணிச்சலும், ஆற்றலும் தான் காரணம். நம் மரபு சார்ந்த கலைகளை மாணவர்களின் நெஞ்சில் பதிவு செய்வதை நான் வரவேற்கிறேன். பள்ளிக் கல்வியில் கலை, பண்பாட்டை ஒருங்கிணைப்பதால் மாணவர்களின் சிந்தனை திறன் அதிகரிக்கும். அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நான் முதல்வன், புதுமைப் பெண், சிறார் திரைப்படங்கள் திரையிடுதல், வானவில் மன்றங்கள் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் பள்ளிக் கல்வித்துறைக்கு என்று ரூ.36 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக ஒதுக்கீடு செய்து திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஒரு போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றோம் என்றில்லாமல், தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற வேண்டும். மாணவர்கள் அனைவரும் படித்து முடித்தவுடன் நிறைய சம்பாதிக்கிறோம் என்று முடிந்துவிடாமல் கலைத் தொண்டையும் ஆற்ற வேண்டும். மாணவர்கள் அறிவு கலை அறிவாக, கல்வி அறிவாக, பகுத்தறிவாக வளர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.