பொங்கல் அன்று நடைபெற உள்ள எஸ்பிஐ முதன்மை தேர்வை வேறு நாளில் நடத்தக் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்பிஐ வங்கியின் பொது மேலாளர் அறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். சு.வெங்கடேசன் எம்.பி நடத்தி வரும் உள்ளிருப்பு போராட்டத்திற்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் எம்.பி, திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பாரத ஸ்டேட் வங்கியின் கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகையன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மட்டும் இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 5,008 பணியிடங்களுக்கான ஸ்டேட் வங்கியின் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 15ஆம் தேதி முதன்மை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையன்று தேர்வு அறிவிக்கப்பட்டது தேர்வர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பொங்கல் பண்டிகையை கொண்டாடும் மனநிலையில் அனைவரும் இருப்பதால் தேர்வு எழுதுவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படக்கூடும் எனவும், பொங்கல் பண்டிகைக்கு பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏற்கனவே திட்டமிட்டிருப்பதாலும் ஜனவரி 15ஆம் தேதி பொங்கலுக்கு பதில் வேறு ஒரு நாளில் முதன்மைத் தேர்வை நடத்த வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை வைத்தனர்.
பொங்கல் திருநாளன்று வைக்கப்படும் எஸ்பிஐ தேர்வுத் தேதியை மாற்ற வேண்டும் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன், தென் சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனாலும், இதுவரை தேர்வு தேதி மாற்றப்படவில்லை. பொங்கல் அன்று எஸ்பிஐ வங்கி கிளார்க் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்வுத் தேதியை மாற்ற வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஸ்டேட் வங்கி சென்னை வட்டாரத் தலைமையகத்தை முற்றுகையிடும் போராட்டம் நத்தப்பட்டது.
சென்னை நுங்கப்பாக்கம் பாரத ஸ்டேட் வங்கி தலைமையகத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி சு.வெங்கடேசன், சி.பி.ஐ.எம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் செல்வா, வட சென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த வங்கி அலுவலக அதிகாரிகள் அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றனர். பேச்சுவார்த்தையில் வங்கி அதிகாரிகள், தேர்வு தேதி தள்ளி வைப்பது குறித்து மேலதிகாரிகளிடம் பேசிவிட்டு சொல்வதாகவும், போராட்டத்தைக் கைவிடும்படியும் தெரிவித்தனர். ஆனால், எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் தற்போதே பேசி முடிவு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வங்கி அலுவலகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், தேர்வைத் தள்ளி வைக்கும் உத்தரவு வரும் வரை நாங்கள் இங்கிருந்து நகரமாட்டோம் என அதிகாரிகளிடம் உறுதியாகத் தெரிவித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய சு.வெங்கடேசன், “தமிழ்நாட்டின் குரலை வஞ்சிப்பது தமிழ்நாடு பெயர் குறிப்பிடுவதை தவிர்ப்பது, தமிழ்நாட்டின் இலட்சினையை மறுப்பது தேர்தல் நடக்கின்ற மையங்கள் முழுக்க எஸ்பிஐ வங்கியின் ஊழியர்கள் தேர்வு பணியாளர்களாக பயன்படுத்த வேண்டும் இப்படியாக தேர்வர்கள் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல தமிழர்களின் உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சனை” என்றார்.
மேலும், “இந்தியா முழுவதும் நடைபெறும் இந்த தேர்வை தமிழ்நாட்டில் தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் விழாவில் வைக்கப்படுகிறது. வேறு ஒரு நாள் வைக்க வேண்டும். இதுவே விநாயகர் சதுர்த்தி அன்று இதுபோல தேர்வு வைப்பார்களா? தமிழர் விரோதப் போக்குடன் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. தமிழர் திருநாளான பொங்கல் திருநாளன்று தேர்வு வைத்து திருநாளை கொண்டாட முடியாதது போல் மத்திய அரசு செயல்படுகின்றது. தேர்தல் தேதியை மாற்றும் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும்” எனத் தெரிவித்தார். திருமா, தமிழச்சி ஆதரவு
இந்நிலையில், எம்.பி சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் நடத்தி வரும் உள்ளிருப்பு போராட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரும் இணைந்தனர். விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, தென்சென்னை திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் அடுத்தடுத்து நேரில் சென்று, சு.வெங்கடேசனின் உள்ளிருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.