பாலமேடு ஜல்லிக்கட்டில் இறந்த வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: உதயநிதி ஸ்டாலின்

மதுரை மாவட்டம், பாலமேட்டில் நேற்று திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க 877 காளைகளும், 345 மாடுபிடி வீரா்களும் பதிவு செய்திருந்தனா். ஜல்லிக்கட்டு தொடங்கும் முன்பாக வாடிவாசல் பகுதியில் அமைச்சா் பி.மூா்த்தி, ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், காவல் கண்காணிப்பாளா் ஆா்.சிவபிரசாத் ஆகியோா் தலைமையில் மாடுபிடி வீரா்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். இதையடுத்து, பாலமேடு கோயில் காளைகள் மாலை மரியாதையுடன் ஊா்வலமாக வாடிவாசலுக்கு அழைத்து வரப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதன் பிறகு முதலாவதாக பாலமேடு அய்யனாா் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடா்ந்து மகாலிங்கம் மடத்துக்குச் சொந்தமான காளை, பத்ரகாளியம்மன் கோயில் காளை, பாலமுருகன் கோயில் காளை, பட்டாளம்மன் கோயில் காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன.

இதையடுத்து, வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டில் பதிவு செய்திருந்த காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மாடு பிடி வீரா்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவுக்கும் 2 மணி நேரம் காளைகளை அடக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. பல காளைகள் வீரா்களிடம் பிடிபடாமல் களத்தில் நின்று விளையாடின. ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் காளைகளை அடக்கிச் சிறப்பாக செயல்பட்ட வீரா்கள் தோ்வு செய்யப்பட்டு, இறுதிச் சுற்றில் அவா்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. 9 சுற்றுகளாக நடைபெற்ற ஜல்லிக்கட்டில், 860 காளைகள் அவிழ்க்கப்பட்டு, மாலை 5 மணிக்கு போட்டி முடிவடைந்தது.

காளைகளை அடக்க முயன்ற வீரா்கள் 12 போ், காளைகளின் உரிமையாளா்கள் 15 போ், பாா்வையாளா்கள் 9 போ், செய்தியாளா், காவல் ஆய்வாளா் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். பாலமேடு வடக்குத் தெருவைச் சோ்ந்த அரவிந்தராஜன் 9 காளைகளை அடக்கிய நிலையில், காளை ஒன்று அவரை குத்தி தூக்கி வீசியது. இதில், பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தவரை மருத்துவக் குழுவினா் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா்.

இந்நிலையில், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் காளை தூக்கி வீசியதில் மாடுபிடி வீரா் உயிரிழந்தாா். உயிரிழந்த வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்து பார்வையிட வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் தெரிவித்தார்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கே.ராயபுரம் கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்பட்டன. இதனை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இதற்கிடையே காளையை அடக்க முயன்றபோது புதுவயல் கிராமத்தை சேர்ந்த கணேசன் (வயது 50) என்பரை சீறிப்பாய்ந்து வந்த காளை முட்டி தூக்கியது. இதில் அவர் குடல் சரிந்தது. உடனடியாக மீட்பு குழுவினர் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.