புரட்சியாளா் சே குவேராவின் மகள், பேத்தி சென்னை வருகை!

புரட்சியாளர் சே குவேராவின் மகள் மற்றும் பேத்தி ஆகியோர் இன்று சென்னை வருகை தந்தனர். சென்னை விமான நிலையத்தில் இடதுசாரி கட்சியினர் சே குவரேவின் மகள், பேத்திக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

அர்ஜெண்டினா எனும் நாட்டில் பிறந்து மருத்துவராக உருவாகி லத்தீன் அமெரிக்க நாடுகளின் உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் போராடியவர் புரட்சியாளர் சே குவேரா. கியூபாவின் பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து விடுதலையை வென்றெடுத்து அரசாங்க அமைச்சராகவும் பணியாற்றியவர். இன்றைய உலகில் புரட்சி என்பதன் முகமாக இருப்பவர் சே குவரா. அத்தகைய புரட்சியாளர் சே குவரேவின் மகள் அலெய்டா குவேரா, பேத்தி பேராசிரியர் டாக்டர் எஸ்டெஃபானி குவேரா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இந்தியா வருகை தந்துள்ளனர். கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பல நிகழ்ச்சிகளில் இருவரும் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து இன்று சென்னை வருகை தந்தனர் அலெய்டாவும் எஸ்டெஃபானியும். இருவருக்கும் சென்னை விமான நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் சார்பாக உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. சென்னையில் நாளை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அலெய்டா, எஸ்டெஃபானி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கேரளா முன்னாள் அமைச்சர் பேபி, திமுக எம்பியும் அக்கட்சி துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி, சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.