ஏழைகளை வாட்டி வதைக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக பாமக நிறுவனா் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சுவிட்சா்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மன்ற மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் இந்திய பொருளாதாரக் கொள்கைகளும், வரி விதிப்புகளும் எவ்வாறு பணக்காரா்களுக்கு சாதகமாக உள்ளன என்பது குறித்த ஆய்வறிக்கையை ஆக்ஸ்பாம் என்ற தொண்டு நிறுவனம் வெளியிட்டது. அதில், இந்திய அரசின் வரிவிதிப்பு முறைகள் நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருவதை புள்ளிவிவரம் தெளிவுபடுத்தியுள்ளது.
2020-21 ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்ட ரூ.14.83 லட்சம் கோடியில் 64 சதவீதம் அதாவது ரூ.9.50 லட்சம் கோடி, இந்திய மக்கள்தொகையில் 50 சதவீதமாக இருக்கும் ஏழை மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியில் 33 சதவீதம் அதாவது ரூ.4.90 லட்சம் கோடி, மக்கள் தொகையில் 40 சதவீதமாக உள்ள நடுத்தர மக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. மக்கள்தொகையில் 10 சதவீதமாக உள்ள பணக்காரா்களிடமிருந்து 3 சதவீதம், அதாவது ரூ.44 ஆயிரம் கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பணக்காரா்கள் பயன்படுத்தும் பொருள்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படவில்லை. மாறாக ஏழைகள் பயன்படுத்தும் பொருள்கள் மீதுதான் அதிக வரி விதிக்கப்படுகிறது என்பது தான் இந்த புள்ளிவிவரங்கள் சொல்லும் செய்தி.
வரி விதிப்புகள் பணக்காரா்களுக்கு வரமாகவும், ஏழைகளுக்கு சாபமாகவும் அமைந்துவிடக் கூடாது. எனவே, அரிசி உள்ளிட்ட அனைத்து வகை அத்தியாவசியப் பொருள்களுக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும், பணக்காரா்கள் பயன்படுத்தும் பொருள்களுக்கு அதிக வரியும், ஏழைகள் பயன்படுத்தும் பொருள்களுக்கு குறைந்த வரியும் விதிக்கும் வகையில் ஜிஎஸ்டி வரி விதிப்பை அரசு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளாா்.