கென்யாவில் இருந்து நாமக்கல் வந்த இளைஞருக்கு கொரோனா உறுதி!

கென்யா நாட்டில் இருந்து தமிழ்நாடு திரும்பிய நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

சீனாவில் பரவி வரும் பிஎப் 7 கொரோனா வைரஸ் உலக மக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தினசரியும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளதால் இந்தியாவிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சீனாவில் கொரோனா மீண்டும் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்தியா உள்பட பல நாடுகள் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளன. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சீனா, ஜப்பான், ஹாங்காங் போன்ற நாடுகளில் இருந்து வருபவர்களை ரேண்டமாக 2 சதவீதம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி முதல் கொரோனா பரிசோதனை பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. மருத்துவமனைகளும் தயார் நிலையில் உள்ளதாக மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். கொரோனா குறித்து யாரும் பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கென்யாவில் பணியாற்றி வந்த, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் காளப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த 36 வயது இளைஞர் பொங்கல் பண்டிகையையொட்டி இரு நாள்களுக்கு முன்பு அவர் நாடு திரும்பினார். கென்யாவிலிருந்து ஷார்ஜா வழியாக கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கே அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டடு, சளி மாதிரிகள் சென்னையில் உள்ள கொரோனா ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது. இந்த ஆய்வு முடிவில், நாமக்கல் நபருக்க கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜெ. பிரபாகரன் உத்தரவின் பேரில், அவரது வீட்டுக்கு வந்த சுகாதாரத்துறை ஊழியர்கள், அவரை வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தினர். மேலும், அவருடைய குடும்பத்தில் உள்ள 6 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் காளப்பநாயக்கன்பட்டி பகுதியில் கொ ரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் நலமுடன் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.