ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல்!

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடக்கும் என்று இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவெரா திருமகன் மாரடைப்பால் காலமான சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். உடல்நிலை மோசமான நிலையில் ஈவெரா திருமகன் மரணம் அடைந்ததார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சட்டசபை செயலாளர் இந்த சட்டசபை கூட்ட தொடரில் அறிவித்து விட்டார்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மற்றும் மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.திருமகன் ஈவெரா காலமானதால் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்.27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. திரிபுரா சட்டப்பேரவைக்கு பிப்.16-ம் தேதியும், மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவைக்கு பிப்.27-ம் தேதியும் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாகாலாந்து சட்டப் பேரவையின் பதவிக்காலம் மார்ச் 12ம் தேதியுடனும், மேகாலயாவின் பதவிகாலம் மார்ச் 15ம் தேதியுடனும், திரிபுராவின் பதவிக்காலம் மார்ச் 22ம் தேதியுடனும் முடிவடைகிறது. இதனையடுத்து மேற்கண்ட மூன்று மாநிலங்களும் சட்டப் பேரவை தேர்தலுக்கு ஆயத்தமாகியுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன் நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான தேர்தல் கமிஷன் குழுவினர் சென்றனர். அங்குள்ள அரசியல் கட்சிகள் மற்றும் மாநில அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. இதனைத் தொடர்ந்து இன்று மேகாலயா, நாகலாந்து, திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப் பேரவை தேர்தல் குறித்த அதிகாரபூர்வ அட்டவணையை வெளியிட்டனர். இவர்கள் அட்டவணையை வெளியிட்ட நிமிடம் முதல், மூன்று மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது.

ஜன.31-ம் தேதி முதல் பிப்.7-ம் தேதி வரை வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். பிப்.8-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. பிப்.10-ம் தேதி வரை வேட்புமனுக்களை திரும்ப பெறலாம். 3 மாநில தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.