ஆர்வக்கோளாறுகள் உருட்டாமல் இருந்தால் சரி: செந்தில் பாலாஜி

ஆர்வக்கோளாறுகள் உருட்டாமல் இருந்தால் சரி என மின்சாரத்துறை செந்தில் பாலாஜி கிண்டலடித்துள்ளார்

தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த டிசம்பர் மாதம் தனது டுவிட்டர் பக்கத்தில், “கடந்த (2022 டிசம்பர் மாதம்) 10ஆம் தேதி ‘போட்டோஷாப்’ கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும் போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் ‘எமர்ஜென்சி’ கதவை திறந்து விளையாடியிருக்கிறார்கள்.” என்று பதிவிட்டிருந்தார். இந்த டுவீட் பெரும் சர்ச்சையானது.
இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்ட அந்த இரண்டு பேரில் ஒருவர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என்றும், மற்றொருவர் பாஜக தேசிய இளைஞரணித் தலைவரும் கர்நாடக எம்.பி.யுமான தேஜஸ்வி யாதவ் என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்த விவகாரம் மேலிட அழுத்தம் காரணமாக இந்த விவகாரம் மூடி மறைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. மத்திய அமைச்சகத்தில் தலையீட்டின்பேரில் இந்த சர்ச்சை மூடி மறைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பலரும் குற்றம் சாட்டியதுடன், ஒருமாதகாலமாகியும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த நிலையில், விமானத்தின் அவசரகால கதவை திறந்த விவகாரத்தில் விசாரணைக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. எனவே, விசாரணைக்காக குறிப்பிட்ட விமானத்தில் பயணித்த பாஜக பிரமுகர்கள் உள்ளிட்டவர்கள் அழைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, ஆர்வக்கோளாறுகள் உருட்டாமல் இருந்தால் சரி என மின்சாரத்துறை செந்தில் பாலாஜி கிண்டலடித்துள்ளார். இதுகுறித்து செந்தில் பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில், “2 ஆர்வக்கோளாறுகள் விமானத்தின் Emergency கதவை திறந்து விளையாடியது பற்றி டிச-29 அன்று நான் கேள்வியெழுப்பி இருந்தேன். இன்று DGCA விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு வாட்ச் கட்டுவது தேசப்பற்றென உருட்டிய பொய்யர், சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்தேன் என உருட்டாமல் இருந்தால் சரி” என பதிவிட்டுள்ளார்.

திருச்சியில் கடந்த மாதம் பாஜக மாநில செயற்குழு கூட்டம் ஒன்று நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா ஆகியோர் சென்னையில் இருந்து இண்டிகோ நிறுவனத்தை சேர்ந்த 6E 7339 ரக விமானத்தில் திருச்சி சென்றனர். காலை 10.05 மணிக்கு புறப்பட வேண்டிய அந்த விமானத்தின் அவசரகால கதவை பயணி ஒருவர் திறந்ததால், சுமார் 2.30 மணி நேரம் அந்த விமானம் தாமதமாக புறப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, விமானத்தின் அவசரகால கதவை திறந்தவர்கள், அண்ணாமலையும், தேஜஸ்வி யாதவும் என கூறியதாக செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தற்போது உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.