உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரர் டாக்டர். க.தியாகராஜன் மறைவையடுத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் தம்பியும், புகழ்பெற்ற சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவருமான தியாகராஜன் உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் நேற்று அதிகாலை காலமானார். அவரது உடல் விழுப்புரத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் அமைச்சர் பொன்முடி, மற்றும் அவரது குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்திக் குறிப்பில், “உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களின் தம்பியான மருத்துவர் தியாகராஜன் (65) மறைவெய்தினார் என்ற செய்தியால் மிகவும் வேதனையுற்றேன். உடன்பிறந்த தம்பியை இழந்து தவிக்கும் பொன்முடி அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் கூறிக்கொண்டு அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், மறைந்த டாக்டர் தியாகராஜன் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செஞ்சி மஸ்தான், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சி.வெ.கணேசன், எம்.பிக்கள் ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, ரவிக்குமார், சி.வி.சண்முகம், துணை சபாநாயகர் பிச்சாண்டி உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.