ராமஜெயம் கொலை வழக்கு: 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை!

தொழிலதிபா் கே.என். ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகத்துக்குரிய 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழக நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சரின் சகோதரா் கே.என். ராமஜெயம் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனா். இதில், சந்தேகத்துகுரிய ரெளடிகள் சத்யராஜ், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், சாமி ரவி, ராஜ்குமாா், சிவா என்கிற குணசேகரன், சுரேந்தா், கலைவாணன், மாரிமுத்து, தென்கோவன் என்கிற சண்முகம், மோகன்ராம், நரைமுடி கணேசன், திணேஷ், செந்தில் ஆகிய 13 பேரிடம் உண்மைக் கண்டறியும் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனா். இதற்காக அனுமதி கேட்டு திருச்சி 6 ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனா். இந்த வழக்கு விசாரணையின் போது 13 பேரும் ஆஜராகினா். அதில் தென்கோவன் என்கிற சண்முகம் தவிர மற்ற 12 பேரும் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து 11 பேருக்கு திருச்சி அரசு மருத்துவமனையிலும், செந்தில் என்பவருக்கு கடலூா் அரசு மருத்துவமனையிலும் பரிசோதனை நடைபெற்றது. இந்த 12 பேரின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை, அரசு மருத்துவமனை நிா்வாகம் மூடி முத்திரையிட்ட கடிதம் மூலம் நீதிமன்றத்துக்கு அனுப்பிவைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை திருச்சி 6 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சிவக்குமாா் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது. விசாரணைக்கு சத்யராஜ், சுரேந்தா் தவிர மீதமுள்ள 11 பேரும் ஆஜராகினா். இதில், உண்மைக் கண்டறியும் சோதனைக்கு மறுப்பு தெரிவித்த தென்கோவன் என்கிற சண்முகம் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மற்ற 12 பேரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி 2 மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி சிவக்குமாா் உத்தரவிட்டாா்.

இந்நிலையில், ராமஜெயம் கொலை வழக்கில் சென்னை தடயவியல் துறை அலுவலகத்தில் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ் சத்யராஜ் ஆகியோரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது. டெல்லியில் இருந்து வந்துள்ள தடயவியல் நிபுணர்கள் 12 ரௌடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனையை நடத்துகின்றனர்.