மருந்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்யும் மருந்து கடைகளின் மீது கடு்ம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.
மனநோய் மற்றும் தூக்க மருந்துகளை தவறான பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகின்றதா என்பதை கண்காணிக்க சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மருந்து கடைகளில் மருந்து கட்டுப்பாட்டு துறை சார்ந்த அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். அதில் சென்னை திருவான்மியூர் கடற்கரை சாலையில் உள்ள ஒரு மருந்து கடையில் வலிநிவாரண மருந்துகள் அதிக அளவில் வாங்கி வைக்கப்பட்டிருந்ததும், உரிய ரசீது இல்லாமல் விற்பனை செய்யப்படுவதும் கண்டறியப்பட்டது. இதன் தொடர்பாக அந்த மருந்துக்கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த கடைமீது மருந்து மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இதை அடிப்படையாக கொண்டு யாருக்கும் மனநோய் மற்றும் தூக்க மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது என்றும், மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகளை விற்பனை ரசீதுகளுடன் விற்பனை செய்ய வேண்டும். மனநோய், தூக்க மருந்துகளின் தவறான பயன்பாட்டைத் தடுக்க மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் அதிரடியாக தமிழகத்தில் உள்ள அனைத்து சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். வலிநிவாரண மருந்துகள் மற்றும் மாத்திரைகளை போதை வஸ்துக்களாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.