தமிழ்நாட்டு மாணவ மாணவிகள், இளைஞர்கள் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, குரூப் 2 தேர்வுகளில் காட்டும் ஆர்வத்தை மத்திய அரசு வேலைவாய்ப்புகளுக்கான யுபிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளில் காட்டுவதில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த விழாவில் மாணவர்களுக்கான சிறப்புக் கையேடுகள் வழங்கப்பட்டன. பின்னர் மாணவர்கள் மத்தியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
சுதந்திரம் அடைந்து இந்த நாள் வரை தமிழ்நாட்டில் உள்ள அரசு ஐ.டி.ஐக்களின் எண்ணிக்கை 91 மட்டுமே. கடந்த ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 11 புதிய ஐ.டி.ஐ.க்களை துவங்கியுள்ளோம். மேலைநாடுகளில் தரப்படும் கல்வியைப் போன்று தமிழ்நாட்டு மாணவர்கள் பெறும் வகையில் டாடா கன்சல்டன்சிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ஐ.டி.ஐ.க்கும் 30 கோடிக்கும் மேல் ஒதுக்கீடு செய்து அந்த ஐ.டி.ஐ.க்களை தரம் உயர்த்த 2800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு ஐ.டி.ஐ.க்களில் இந்தாண்டு சேர்க்கை 94 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் இளைஞர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெற்று உயரிய நிலையை அடைவதை இலக்காகக் கொண்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் மூலம் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. முதலாவதாக, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள மாநிலக் கல்லூரியில் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி மையம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மாணவ மாணவிகள், இளைஞர்கள் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, குரூப் 2 தேர்வுகளில் காட்டும் ஆர்வத்தை மத்திய அரசு வேலைவாய்ப்புகளுக்கான யுபிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளில் காட்டுவதில்லை. இது மிகவும் வருத்தம் அளிக்கக்கூடிய செய்தி. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில் 2.1% பேர் தான் மத்திய அரசின் போட்டித்தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறுகிறார்கள் என்று புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ்நாட்டினைச் சேர்ந்தவர்கள் பணிபுரிவதை விட வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமாகப் பணிபுரிவதற்கு இதுவும் ஒரு காரணம். இது உண்மையிலேயே வருத்தமளிக்கக்கூடிய ஒன்று. இதனை நாம் உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என்கிற நோக்கில் மத்திய அரசுப் பணிகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில் மாவட்டந்தோறும் போட்டித்தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகளை அரசு துவங்குகிறது.
இரயில்வே மற்றும் வங்கி போன்ற மத்திய அரசுப் பணிகளில் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சேர்வதற்கு ஏதுவாக போட்டித் தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். மாணவர்கள் பள்ளி, கல்லூரி படிப்புகளுடன் வேலைவாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.