சந்திரசேகர ராவ் தலைமையில் அணி திரண்ட 3 முதல்வர்கள்!

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று தெலங்கானா கம்மத்தில் அவர் தலைமையில் நடந்த மாநாட்டில் 3 மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். இது தேசிய அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி எனும் கட்சியை தொடங்கி முதல்வரானார். தற்போது அவருக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. மேடைக்கு மேடை பிரதமர் நரேந்திர மோடியை, சந்திரசேகரராவ் விமர்சனம் செய்து வருகிறார். மேலும் மோடி உடனான சந்திப்பை அவர் தவிர்த்து வருகிறார். இந்நிலையில் தான் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் வகையில் தேசிய அரசியலில் கவனம் செலுத்த புதிய கட்சியாக பாரத் ராஷ்ட்ர சமிதியை உருவாக்கினார். தற்போது தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் இல்லாத வகையில் சந்திரசேகரராவ் கூட்டணி அமைக்க காய் நகர்த்தி வருகிறார். பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். சமீபத்தில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, முன்னாள் பிரதமரான கர்நாடகாவின் தேவேகவுடா, அவரது மகனும், ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த கர்நாடகா முன்னாள் முதல்வர் எச்டி குமாரசாமி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்பட பல தலைவர்களை சந்தித்து வருகிறார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான திருமாவளவனும், சந்திரசேகர ராவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். விரைவில் சந்திரசேகர ராவ் பாஜகவுக்கு எதிரான சித்தாந்தம் கொண்ட கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார்.

இந்நிலையில் தான் கட்சியின் பெயர் மாற்றத்துக்கு பிறகு முதல்முறையாக தெலுங்கானாவின் கம்மத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை சந்திரசேகர் ராவ் நேற்று நடத்தினார். இதில் பங்கேற்க பாஜகவை எதிர்க்கும் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் 3 மாநில முதல் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். அதன்படி ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் உத்தர பிரதேச எதிர்க்கட்சி தலைவரான சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா உள்பட தேசிய தலைவர்கள், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தலைவர்கள் அனைவரும் பாஜகவை எதிர்த்து பேசினர். மேலும், மத்திய அரசு ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருவதாகவும், உள்நோக்கம் கொண்டு இந்தியாவை பிரித்தாளுவதாகவும் குற்றம்சாட்டினர். மேலும் பாஜகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இணைய வேண்டும் என அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

இந்த கூட்டத்தில் சந்திரசேகர் ராவ் பேசுகையில், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினை போன்றவற்றுக்கு மத்திய அரசுதான் காரணம். பிரதமர் மோடி வீட்டுக்கு போவார். பாரத ராஷ்டிர சமிதி ஆதரவில் அமையும் மத்திய அரசு, எல்.ஐ.சி. முதலீட்டு விலக்கல் போன்ற நடவடிக்கைகளை நிறுத்தும். நாடு முழுவதும் விவசாயிகளுக்காக ரைத்து பந்து போன்ற நலத்திட்டங்களை செயல்படுத்தும் என்றார்.

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், ‘தற்போது நாடு மாற்றத்தை விரும்புகிறது. வருகிற 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல், மக்களுக்கு ஒரு வாய்ப்பு. பத்தாண்டு கால ஆட்சி போதும். இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் மக்களாகிய நீங்கள் காத்திருக்கப்போகிறீர்கள்?’ என்றார்.

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசும்போது, ‘மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காக்க ஒரு புதிய எதிர்ப்பு தேவை’ என்று கூறினார்.

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ‘மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி தனது நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது. தற்போதைய ஆட்சிக்காலத்தைக் கடந்து அது நீடிக்காது’ என்றார்.

இளைஞர்கள் வேலையின்றி தவிக்கும் தற்போதைய சூழலில், நாடு வேலைவாய்ப்புகளை எதிர்பார்க்கிறது என்று பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் பேசினார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா பேசுகையில், ‘பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கூட்டணியை எதிர்த்து நாம் போராட வேண்டும். வருகிற 2024-ம் ஆண்டு தேர்தலில் அவர்களை தோற்கடிக்க வேண்டும்’ என்றார்.