மின்சார சட்டத் திருத்த விதிகளை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக் கூடாது; இப்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாட்டில் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இரண்டு மாதத்துக்கு ஒருமுறை மின்பயன்பாடு அளவீடு எடுக்கப்படுவதால் கட்டணம் அதிகமாக வருவதால் இதை மாதந்தோறும் கணக்கெடுத்து கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். திமுக தேர்தல் அறிக்கையிலும் மாதந்தோறும் மின்பயன்பாடு அளவீடு எடுத்து கட்டணம் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், மத்திய அரசு புதிய மின்சார திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, புதிதாக அறிமுப்படுத்தப்பட்டுள்ள மின்சார திருத்த சட்ட விதி 14இன் படி, மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான எரிபொருள் செலவு அதிகரித்தாலோ, கொள்முதல் விலை உயர்ந்தாலோ, மின் வாரியத்துக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களுக்கு ஏற்ப அந்த கூடுதல் செலவை அதே மாதத்தில் நுகர்வோரிடமிருந்து வசூலித்துக் கொள்ளலாம் என்று அதிகாரம் அளித்து உள்ளது. இந்த விதி அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கும் போது ஏற்படும் கூடுதல் செலவினங்களையும், மின்சாரம் தயாரிப்பதற்கு நிலக்கரி வாங்கும்போது ஏற்படும் கூடுதல் செலவினங்களை சரிகட்டவும் பொது மக்களிடம் இருந்து வசூலிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் வசூலிக்க முடியாத சூழல் ஏற்படுமானால் ஆண்டுக்கு ஒருமுறை என்று கணக்கிட்டு அதை நுகர்வோரிடம் மின்வாரியம் வசூலிக்கலாம் என விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே மின்கட்டணம் அதிகமாக உள்ளது என்று மக்கள் தெரிவித்து வரும் நிலையில், மின்வாரியத்தின் கூடுதல் செலவுகளையும் பொது மக்களிடம் இருந்து வசூலிக்கலாம் என்று கூறுவது இது மக்களுக்கு மேலும் அதிக சுமையாக அமையும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பொதுமக்களிடம் இருந்து மின்வாரியத்தில் மீட்டருக்கு மட்டும்தான் டெபாசிட் என்ற பெயரில் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. அதாவது மின்வாரியத்தில் மூன்று மாத மின்சார கட்டணம் டெபாசிட் தொகையாக இருக்கும். இந்த தொகை கூடும் போதும், குறையும் போதும் அதற்கேற்ப மின்வாரியத்தில் இருந்து நமக்கு தகவல் அனுப்பி பணம் செலுத்துமாறு கூறுவார்கள். ஆனால், இப்போது மின்வாரிய கூடுதல் செலவுகளையும் பொதுமக்களிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம் என்று அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மின்வாரிய நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானியிடம் கேட்டதற்கு, மின் திருத்த விதிகளில் அவ்வாறு கூறப்பட்டுள்ளது உண்மை தான். கூடுதல் செலவுகளை மக்களிடம் இருந்து பெறலாம் என அதில் கூறப்பட்டிருந்தாலும் அது கட்டாயம் கிடையாது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அந்த விதி இப்போதைக்கு பொருந்தாது. ஒவ்வொரு ஆண்டும் ஆணையம் அளித்த ஒப்புதல்படி, பணவீக்கத்தின் அடிப்படையில் கட்டணம் உயரும். எனவே மின்வாரிய கூடுதல் செலவுகளை மக்களிடம் வசூலிக்கும் நிலை தமிழ்நாட்டில் கட்டாயமில்லை என்றார்.
இதுபற்றி மின்வாரிய தொழிற்சங்க அதிகாரி ஒருவர் கூறுகையில், மின்சார வினியோகத்தை டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் தனியாரிடம் கொடுக்க விரைவில் முடிவெடுப்பார்கள் என தெரிகிறது. அவ்வாறு தனியாரிடம் செல்லும் போது அவர்கள் செலவினங்களை வசூலிப்பதற்கு ஏற்ப இந்த சட்ட திருத்தம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது. மாதந்தோறும் செலவினங்களை வசூலிப்பதை இப்போது நடைமுறைப்படுத்தாவிட்டாலும் விரைவில் இது அமல்படுத்தப்படும் என்றே தெரிகிறது என்று அவர் தெரிவித்தார்.
இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பக்க பதிவில் கூறியுள்ளதாவது:-
மத்திய அரசு அறிவிக்கை செய்துள்ள மின்சார சட்டத் திருத்த விதிகள் 2022 நடைமுறைப்படுத்தப்பட்டால், மின்சாரக் கட்டணம் அதன் உற்பத்திச் செலவு மற்றும் கொள்முதல் விலைகளுக்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு மாதமும் நிர்ணயிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான எரிபொருள் செலவு அதிகரித்தாலோ, கொள்முதல் விலை உயர்ந்தாலோ, அந்த கூடுதல் செலவை அதே மாதத்தில் நுகர்வோரிடமிருந்து வசூலிக்க புதிய விதிகள் வகை செய்கின்றன. தனியார் மின்நிறுவனங்களுக்கு சாதகமான இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ்நாட்டில் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வை ஏழை மற்றும் நடுத்தர மக்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இத்தகைய சூழலில் கொள்முதல் விலைக்கேற்ப மின்கட்டணம் உயர்த்தப்படுமானால், மின்சார கொள்முதலில் நடக்கும் ஊழல்களின் சுமையைக் கூட மக்கள் தான் சுமக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு மாதமும் மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுவது தேவையற்ற குழப்பங்களையும், பாதிப்பையும் ஏற்படுத்தும். இன்றைய சூழலில் மக்களால் இதை தாங்கிக் கொள்ள முடியாது. எனவே, மின்சார சட்டத் திருத்த விதிகளை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக் கூடாது; இப்போதுள்ள நிலையே தொடர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.