மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்காக இதுவரை ரூ.85 கோடி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், பயனாளிகளின் விவரங்களை கொடுக்க தயார் என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் முதல் நபருக்கு மருத்துவ பெட்டகம் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம், தொற்றா நோய்களான சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடு தேடிச் சென்று, அவர்களுக்கு மாதம்தோறும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதன் பயனாளிகள் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் படிப்படியாக வளர்ந்து ஒரு கோடியாவது பயனாளி என்ற இலக்கை எட்டியது. ஒரு கோடியே ஒன்றாவது பயனாளியான திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மீனாட்சிக்கு இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தின் மருந்து பெட்டகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வழங்கினார்.
இந்த நிலையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு இதுவரை எவ்வளவு ரூபாய் செலவு செலவு செய்யப்பட்டுள்ளது என்றும், திட்டத்தின் ஒரு கோடி பயனாளிகளின் முழு விவரங்களையும் அரசு வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
கடந்த 4 மாதங்களுக்கு முன் இதே அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அப்போது அதற்கான பதில் அளித்திருக்கிறேன். சுகாதாரத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனை இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்வதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மத்திய அமைச்சர் தமிழ்நாடு வந்த போது, சுமார் 5 ஆயிரம் பயனாளிகளுக்கு நேரடியாக மருந்து பெட்டகத்தை வழங்கியுள்ளார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளியாக சிட்லபாக்கத்தில் உள்ள பாஞ்சாலை என்பவருக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது. அதேபோல் 60 லட்சமாவது பயனாளியாக மதுரை அருகே பெரியசாமி என்பவருக்கு மருந்து பெட்டகம் வழங்கினோம். 75 லட்சமாவது பயனாளியாக நாமக்கல் அருகே நல்லம்மாள் என்பவருக்கும், 80 லட்சமாவது பயனாளியாக கோதாமேடு அருகே சாந்தி என்பவருக்கும், 90 லட்சமாவது பயனாளியாக விருகம்பாக்கத்தில் ஷெரீனா பேகம் என்பவருக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது.
அரசியல்வாதிகள் செல்லாத இடங்களுக்குக் கூட மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் சென்றடைந்திருக்கிறது. இந்த திட்டத்தின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளாமல், அரைவேக்காட்டுத்தனமான அறிக்கைகளை வெளியிடுவதென்பது சுகாதார பணியாளர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். அவர் விரும்பினால் டிபிஎஸ் அலுவலகத்தில் ஒரு கோடி பயனாளிகளின் தகவல்களையும் கொடுக்க தயாராக இருக்கிறோம். இந்த திட்டத்துக்காக தமிழக அரசால், ரூ.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.