மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் 2 நாள் அரசுமுறை பயணமாக இலங்கைக்கு செல்கிறார்.
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் 2 நாள் அரசுமுறை பயணமாக இலங்கைக்கு செல்கிறார். அவர் இன்றும், நாளையும் அங்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கு பெறுகிறார். ஜெய்சங்கரின் வருகையை நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் இலங்கை அதிபர் விக்ரமசிங்கே அறிவித்தார். ‘இலங்கையை கடனில் இருந்து மறுகட்டமைப்பு செய்யும் முயற்சிகளில் வெற்றிகரமான நடவடிக்கையாக அவரது வருகை இருக்கப்போகிறது’ என்று அவர் அறிவித்தார்.
இலங்கையில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் தினேஷ் குணவர்த்தனா மற்றும் இலங்கையின் வெளியுறவு மந்திரி அலி சப்ரி ஆகியோரை சந்திக்கிறார். சர்வதேச பண நிதியம், இலங்கைக்கு 2.9 பில்லியன் டாலர் தொகையை கடனாக வழங்க, இந்தியா, சீனா மற்றும் ஜப்பானின் உத்தரவாதத்தை கேட்கிறது. எனவே, இந்திய வெளியுறவு மந்திரியின் வருகையானது இந்த கடன் உத்தரவாதத்தில் வெற்றிகரமான முடிவெடுக்க உதவும் என்று இலங்கை எதிர்பார்க்கிறது.ஏற்கனவே இந்தியா, இலங்கையின் பல்வேறு கட்டமைப்பு திட்டங்களில் நிதி உதவி வழங்கியுள்ளது. தற்போது பொருளாதார மந்தநிலை நீடித்து வரும்நிலையில் சர்வதேச பண நிதியத்தின் 2.9 பில்லியன் டாலர் தொகையை பெறுவதிலும் இந்தியா இலங்கைக்கு உறுதுணையாக இருக்கும் என்று அண்டை நாடான இலங்கை நம்புகிறது.