சென்னையில் குப்பை, கழிவுகளால், அடையாறு, கூவம் ஆறுகள் மற்றும் பக்கிங்காம் கால்வாயின் தண்ணீர், எந்தவித உயிரினங்களும் வாழத் தகுதியற்றதாக மாறியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது என மக்கள் நீதி மய்யம் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் விவசாய அணி மாநில செயலாளர் மயில்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சென்னையில் குப்பை, கழிவுகளால், அடையாறு, கூவம் ஆறுகள் மற்றும் பக்கிங்காம் கால்வாயின் தண்ணீர், எந்தவித உயிரினங்களும் வாழத் தகுதியற்றதாக மாறியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது
தேசிய நதிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதையொட்டி, தமிழ்நாட்டின் தலைநகரில் பாய்ந்தோடும் முக்கிய ஆறுகளான கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாயில், பல்வேறு இடங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில், அடையாறு, கூவம் ஆற்றில் மாதிரி சேகரிக்கப்பட்ட 41 இடங்களில் எங்குமே கரைந்த வடிவிலான ஆக்சிஜன் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இங்குள்ள நீர் எந்த வகை உயிரினங்களும் வாழத் தகுதியற்றதாக மாறியுள்ளது என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நீர்பகுப்பாய்வு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்கிங்காம் கால்வாயின் நிலையும் ஏறக்குறைய இதேதான். உண்மையில், குப்பை, கழிவுகளால் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றின் தண்ணீர் ஏற்கெனவே பயன்படுத்த முடியாத நிலையில்தான் உள்ளது. தற்போது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை இதை உறுதி செய்துள்ளது. நகரமயமாக்கலின் விளைவுகளும், குப்பை மற்றும் கட்டிட, ரசாயன, மருத்துவக் கழிவுகள் உள்ளிட்டவற்றால் இந்த நீர்நிலைகள் பெரிதும் மாசடைந்துள்ளன. சிங்காரச் சென்னை திட்டங்களில் கோடிக்கணக்கில் செலவு செய்தபோதும், எந்த மாற்றமும் நிகழவில்லை.
நம் கண் முன்னே ஆறுகளும், கால்வாயும் அழிந்து கொண்டிருப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது வேதனைக்குரியது. நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நீர்நிலைகளையே எதிர்கால தலைமுறைக்கு விட்டுச் செல்வது வெட்கக்கேடானது. இனியும் நாம் விழித்துக்கொள்ளாவிட்டால் பெரும் விபரீதத்தைத்தான் சந்திக்க நேரிடும். நீர்நிலைகளை மாசுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், மாசடையாமல் தடுக்க உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.
அதேசமயம், பொதுமக்களிடமும் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுவது அவசியமாகும். நீர்நிலைகள் நம் எல்லோருக்குமானது என்பதை உணர்ந்து, முடிந்த அளவுக்கு நீர்நிலைகளை மாசுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். தமிழக அரசு மட்டுமின்றி, பொதுமக்களும், தன்னார்வலர்களும் இணைந்து மரணித்துக் கொண்டிருக்கும் நீர்நிலைகளை உயிர்ப்பிக்க தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.