சீனாவுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறீர்கள்.. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த மட்டும் பிரதமர் நரேந்திர மோடி ஏன் தயங்குகிறார் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
காஷ்மீர் பிரச்சினை குறித்து பிரதமர் மோடி உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியிருந்த நிலையில், பரூக் அப்துல்லாவும் அதை வழிமொழியும் வகையில் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அல் அரேபியா தொலைக்காட்சி சேனலுக்கு இரு தினங்களுக்கு முன்பு பேட்டியளித்தார். அப்போது அவர், “காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா அலட்சியப்போக்குடன் செயல்படுகிறது. இந்த அலட்சியப்போக்கு தொடர்ந்தால் இரு நாடுகள் இடையே அணு ஆயுதப் போர் கூட ஏற்படலாம். எனவே, காஷ்மீர் விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு ஐக்கிய அரபு அமீரகம் அழைத்து வர வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மத்தியஸ்தம் செய்ய வேண்டும்” என அவர் கூறியிருந்தார். ஷெபாஸ் ஷெரீபின் இந்த பேச்சுக்கு இந்தியா உட்பட பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. பாகிஸ்தானில் கடும் பஞ்சமும், பட்டினியும் நிலவி வரும் சூழலில், அந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்தாமல் இந்தியாவை வம்புக்கு இழுப்பது அந்நாட்டுக்கு ஆபத்தாக முடிந்துவிடும் என அவை தெரிவித்தன.
இந்நிலையில், காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லாவும் பாகிஸ்தானின் கருத்தை வலியுறுத்தும் வகையில் பேசியுள்ளார். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை காஷ்மீரில் நுழைந்ததை அடுத்து, பரூக் அப்துல்லா அதில் கலந்துகொண்டார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே காஷ்மீரில் தீவிரவாதமும், வன்முறையும் ஒழியும். இதை மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு உணர வேண்டும். சீனா எத்தனை முறை இந்திய எல்லைகளை தாண்டி வந்து தாக்குதல் நடத்தி இருக்கிறது? அந்த நாட்டுடன் மட்டும் 16 முறை இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. ஆனால், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த மட்டும் பிரதமர் மோடி தயங்குவது ஏன்?
தனது வாக்குவங்கியை அதிகப்படுத்துவதற்காக நாட்டில் உள்ள இந்து – முஸ்லிம்கள் இடையே பகையையும், வெறுப்பையும் பாஜக பரப்பி வருகிறது. இப்போது வெளியான ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படமும் இதே நோக்கத்திற்காகவே வெளியிடப்பட்டது. காஷ்மீர் பண்டிட்டுகளை மீண்டும் காஷ்மீருக்குள் அழைத்து வந்து, மத்திய அரசு மீள்குடியேற்றம் செய்தது. ஆனால் இப்போது அவர்களின் கதி என்ன? தீவிரவாதத் தாக்குதலுக்கு பயந்து அவர்கள் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கின்றனர். முதலில் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை விதைப்பதை நிறுத்துங்கள். பின்னரே நாட்டில் அமைதி ஏற்படும். இவ்வாறு பருக் அப்துல்லா கூறினார்.