போலீசாரின் வாரிசுகளுக்கு சீருடை பணிகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பின் பேரில், சீருடை பணிக்கான வேலைவாய்ப்புகளில் போலீசாரின் வாரிசுகளுக்கு 9 சதவீதமும், போலீஸ் அமைச்சுப் பணியில் இருக்கும் வாரிசுகளுக்கு 1 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசாணை கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 10-ந்தேதி பிறப்பிக்கப்பட்டது. இந்த இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி தீர்ப்பு கூறியது. அதில், போலீசாரின் வாரிசுகளுக்கு, சீருடை பணி வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லாது, சட்டவிரோதமானது என்றும், எதிர்காலத்தில் இந்த அரசாணையை செயல்படுத்தக்கூடாது என்று தடை விதித்து மனுவை தள்ளுபடி செய்தது.
சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசும், பாதிக்கப்பட்ட மதுரையை சேர்ந்த சதீஷ் உள்ளிட்ட 119 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அபய் எஸ். ஓகா, பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. மனுதாரர்களின் வாதத்தை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, ‘போலீசாரின் வாரிசுகளுக்கு சீருடை பணி வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும். ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்த ஆண்டில் சீருடை பணிக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு இந்த தீர்ப்பு பொருந்தும் என உத்தரவிட்டது.