விமானத்தின் எமெர்ஜென்சி கதவுக்கு அருகே அமர்ந்து திமுக எம்பி தயாநிதி மாறன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
திருச்சியில் சில தினங்களுக்கு முன்பு மாநில செயற்குழு கூட்டம் ஒன்று நடந்தது. அதில் கலந்துகொள்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா மற்றும் சில மாநில நிர்வாகிகள் விமானத்தில் பயணித்துள்ளனர். ஓடு தளத்தில் இருந்து விமானம் பறக்க தயாராகும்போது தேஜஸ்வி சூர்யா பக்கத்தில் இருந்த எமெர்ஜென்சி கதவு திறக்கப்பட்டு விமானிகளுக்கு அவசர ஒலி அடித்துள்ளது. பதறிப்போன விமானிகள் விமானத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்று விசாரித்தபோது, தேஜஸ்வி சூர்யா அதுகுறித்து விளக்கம் அளித்ததாகவும் பிறகு மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரம் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசியல் கட்சிகள் அண்ணாமலையையும், பாஜகவையும் தாக்கி பேசி வருகின்றனர்.
இதற்கு மத்தியில் இச்சம்பவம் குறித்து நீண்ட விளக்கம் அளித்த அண்ணாமலை; தேஜஸ்வி சூர்யா படித்தவர், விமானத்தில் அவசர கதவை திறக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. கதவில் இருந்த இடைவெளியை பார்த்ததும் விமான குழுவை அழைத்து கூறினார். நானும் அதை பார்த்தேன், அவர் தவறு செய்யவில்லை இருப்பினும், அவர் எம்பி என்ற பொறுப்பில் இருப்பதால் மன்னிப்பு கோரினார் என்று அண்ணாமலை விளக்கம் அளித்தார். அண்ணாமலையின் இந்த விளக்கத்தை கிண்டலடித்த திமுகவினர், எந்த தவறும் செய்யாமல் ஒருவர் எப்படி மன்னிப்பு கடிதம் எழுதி கொடுப்பார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், தேஜஸ்வியின் விமான விவகாரத்தை கிண்டல் செய்யும் விதமாக திமுக எம்பி தயாநிதி மாறன் வீடியோ வெளியிட்டுள்ளார். இன்டிகோ விமானத்தில் பயணம் செய்த தயாநிதி மாறன் எம்பி, விமானத்தின் அவசர கதவு பக்கமுள்ள இருக்கையில் அமர்ந்து அந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர், நான் அவசர கதவு அருகே அமர்ந்திருக்கிறேன், ஆனால் நான் அதை திறக்க மாட்டேன், அது பயணத்திற்கும், பயணிகளுக்கும் நல்லதல்ல. சுய அறிவுள்ளவர்கள் இந்த காரியத்தை செய்ய மாட்டார்கள் என்று அண்ணாமலையையும், தேஜஸ்வி சூரியவையும் மறைமுகமாக சாடியுள்ளார் தயாநிதி மாறன். இந்த வீடியோ பரவலாக வைரல் செய்யப்பட்டு வருகிறது.