பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே அறநிலையத் துறை நீக்கம்தான்: அண்ணாமலை

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே அறநிலையத் துறை நீக்கம்தான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பாஜக ஆன்மீக ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் துணைத் தலைவர் நாச்சியப்பன் தலைமை வகித்தார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் எச் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அவர்கள் பேசுகையில் இந்து ஆலயங்களை அறநிலையத் துறை மேற்பார்வையிடலாம். நிர்வாகம் செய்யக் கூடாது. குத்தகை என்ற பெயரில் கோயில் நிலங்கள் தாரை வார்க்கப்படுவதை தடுக்க வேண்டும்.

4 லட்சம் ஹெக்டேர் சொத்துகள் உள்ளன. ஆண்டுதோறும் சொத்து விபரங்களை பட்டியலிட வேண்டும். ஆகம விதிமுறைகளில் அரசு தலையிடக் கூடாது. அறங்காவலர்களாக அரசியல் சார்பற்றவர்களை நியமிக்க வேண்டும். மீட்கப்பட்ட சாமி சிலைகளை அருங்காட்சியகங்களில் வைக்கக் கூடாது. மீண்டும் சம்பந்தப்பட்ட கோயில்களில் பிரதிஷ்டை செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை உரிய பணியிடங்களை உரிய விதிமுறைப்படி நிரப்ப வேண்டும். கோயில்கள் பெயரில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். மீட்கப்படும் சில சொத்துக்களும் மீண்டும் தாரை வார்க்கப்படுகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றனர்.

அது போல் மத நம்பிக்கையும் இறை நம்பிக்கையும் இல்லாமல் கோயிலின் மரபு சார்ந்த விஷயங்களில் திமுக அரசு தொடர்ந்து செய்து வரும் அத்துமீறல்களால் பக்தர்களை வஞ்சித்து வருகிறது. பக்தர்களின் காணிக்கை உண்டியல் பணம் சுரண்டப்படுகிறது. கோயில் மரபுகளும் மீறப்படுகின்றன. கணக்கில்லாமல் கோயில்கள் இடிக்கப்படுகின்றன என்பதை கண்டித்து இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இந்த உண்ணாவிரத போராட்ட கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே அறநிலையைத் துறையை நீக்குவதுதான். தமிழ்நாட்டில் சாதியை வைத்து திமுக அரசியல் செய்து வருகிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவியேற்ற நாள் முதல் திமுகவுடன் மோதல் போக்கை கொண்டுள்ளார். திமுகவின் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்ட பாதயாத்திரை போக போவதாக அறிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-

திருக்கோவிலின் மரபுகள் மீறப்படுகிறது. கணக்கில்லாமல் கோவில்கள் இடிக்கப்படுகிறது. புராதன கோவில்களின் நகைகள் உருக்கப்படுகிறது. பக்தர்களின் காணிக்கை உண்டியல் பணங்கள் சுரண்டப்படுகிறது. பூஜை புனஷ்காரங்கள் நிறுத்தப்படுகிறது. பக்தர்கள் வருகைகள் தவிர்க்கப்படுகிறது. கோவில் கும்பாபிஷேகங்கள் மறுக்கப்படுகிறது.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நமக்கு எல்லாம் தெரியும் எனது உறவினர்கள், உங்கள் உறவினர்கள், தெரிந்தவர்கள் எல்லோரும் கடவுளுக்கு வேண்டிக்கொண்டு பசு மாட்டை கொடுப்போம். திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடந்த தணிக்கை அறிக்கையில் ஒரு பத்தியை படித்து பார்த்தால் 5 ஆயிரத்து 309 மாட்டை காணவில்லை. அதாவது பக்தர்கள் மாட்டை கொடுத்த பதிவுகள் உள்ளது. யார் ஏலம் விட்டது? மாடுகளை சைடில் திருடி உறவினர், திமுக கிளைச்செயலாளருக்கெல்லாம் கொடுத்து விற்றுவிட்டீர்களா? 5 ஆயிரத்து 309 மாடுகளை திருச்செந்தூர் கோவிலில் நடத்தப்பட்ட தணிக்கையில் காணவில்லை. ‘வடிவேலு கிணற்றை காணோம் என்று சொன்னது போல்’ திருச்செந்தூர் கோவிலில் 5 ஆயிரத்து 309 மாட்டை காணவில்லை. அப்படி இருக்கும்போது எந்த தைரியத்தில் இந்து சமய அறநிலையத்துறை என்ற துறையை வைத்துக்கொண்டு வெள்ளை, காவி உடையுடன் அமைச்சர் காலை முதல் மாலை வரை சுற்றிக்கொண்டுள்ளார்? இவ்வாறு அண்ணாமலை பேசினார்.