நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு உதவி: ஜெய்சங்கர்

பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு ஐ.எம்.எப்., எனப்படும், சர்வதேச நாணய நிதியம் கடன் அளிக்க முன்வந்துள்ளது; இதற்கு இந்தியா தான் முதன் முதலாக உத்தரவாதம் அளித்தது என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்ற, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கையின் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் தினேஷ் குணவர்த்தனே, வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சாப்ரி ஆகியோரை சந்தித்துப் பேசினார். இது குறித்து நேற்று ஜெய்சங்கர் கூறியதாவது:-

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு ஆறுதல் கூறவே வந்துள்ளேன். இலங்கை அதிபருடனும், அமைச்சர்களுடனும் நடத்திய பேச்சு ஆக்கப்பூர்வமாக இருந்தது.பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு, 32 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவி மற்றும் நிவாரண உதவிகளை இந்தியா அளித்துள்ளது. அண்டை நாடு நெருக்கடியில் இருக்கும்போது, அதற்கு உதவ வேண்டும் என்பதே இதற்கு காரணம். மற்ற நாடுகள் இலங்கைக்கு உதவ வேண்டும் என்பதற்காக இந்தியா காத்திருக்கவில்லை. முதல் ஆளாக உதவியது. இதேபோல், பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு, சர்வதேச நாணய நிதியம், 26 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் உதவி அளித்துள்ளது. இதற்கு இந்தியா அளித்த உத்தரவாதமே காரணம்.

இலங்கையில் வசிக்கும் இந்தியாவை பூர்விகமாக உடைய தமிழர்களுக்கு உதவ வேண்டும் என, இலங்கையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தும்படி இலங்கை அதிபருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மாகாண தேர்தல்களை விரைந்து நடத்தும்படியும், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும், 13வது சட்ட திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும்படியும் வலியுறுத்தப்பட்டது. இரு தரப்பு உறவு தொடர்பாக பேச்சு நடத்த இந்தியாவுக்கு வரும்படி, பிரதமர் மோடி எழுதிய கடிதம், இலங்கை அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பயணத்தில், ஜெய்சங்கர் இலங்கையின் முன்னாள் அதிபர்களான மகிந்த ராஜபக்சே, அவரது இளைய சகோதரர் கோத்தபய ராஜபக்சே இருவரையும் சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார்.