இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி-கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு தொகுப்பூதியத்தை உயர்த்தி அதற்கான ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் குறைந்த தொகுப்பூதியத்தை கருத்தில் கொண்டு, அவர்களது நலன் மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் பொருட்டு அவர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்குவது தொடர்பாக 5 கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளி ஆட்சிக்குழுக் கூட்டத்தில் 354 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்குவதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் 5 கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளியில் பணியாற்றி வரும் 225 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் 129 ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு தொகுப்பூதிய உயர்வுக்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவில் நிர்வாகத்தில் உள்ள 3 கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளி, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ஸ்ரீதேவி குமரி மகளிர் கல்லூரி, தென்காசி மாவட்டம் குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகள் மற்றும் பள்ளியின் 24 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு தொகுப்பூதிய உயர்வுக்கான ஆணைகளை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த தொகுப்பூதிய உயர்வின் மூலம் ஆண்டுக்கு ரூ.2.72 கோடி நிர்வாகத்திற்கு கூடுதல் செலவினம் ஏற்படும். விரிவுரையாளர்கள் நன்றி தொகுப்பூதியத்தை உயர்த்தியதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விரிவுரையாளர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர். பழனியில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக திண்டுக்கல் கலெக்டர் ச.விசாகன், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.