நீட் மசோதா குறித்து இன்னும் ஓரிரு வாரத்திற்குள் விளக்கம் அனுப்பி வைக்கப்படும்: மாசுப்பிரமணியன்

அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நிலையில், பல்வேறு விஷயங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார். குறிப்பாக நீட் விலக்கு குறித்து சில முக்கிய தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

சென்னையில் அமைந்துள்ள கிண்டி கிங் மருத்துவமனை வளாகத்தில் 4.9 ஏக்கர் பரப்பளவில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இதனை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார் அப்போது அங்கிருந்த அதிகாரிகள் கட்டுமானம் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் விளக்கினர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

திமுக ஆட்சி அமைந்தவுடன் கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் பன்னோக்கு மருத்துவமனை கட்டப்படும் என்று முதல்வர் அறிவித்தார். அத்துடன் கட்டுமான பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். இன்று இரண்டாவது முறையாக 4.9 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் இந்த பன்னோக்கு மருத்துவமனை கட்டுமான பணிகளை அவர் ஆய்வு செய்தார். கட்டுமான பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டுள்ளோம். வரும் செப்டெம்பர் மாதம் வரை கட்டுமான பணிகள் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், முதல்வரே தொடர்ந்து கட்டுமான பணிகளை ஆய்வு செய்து வருவதால் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். விரைவில் இதைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம். மாற்றுத்திறனாளிகள் சாய்தளபாதை, தூய்மை பணியாளர்களுக்கு இடம் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.

தலைநகர் சென்னையில் இப்போது திமுக ஆட்சி அமைந்ததும் 209 கி.மீ நீளத்திற்கு மழை நீர் வடிகால் பணிகள் நடத்தப்பட்டது. அதில் 161 கிமீ தூரத்திற்கு பணிகள் மழைக் காலம் தொடங்கும் முன்பே முடிந்துவிட்டது. இதன் காரணமாக நகரில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கவில்லை. மீதமுள்ள 48 கி.மீ தூரத்திற்கு இப்போது பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. அதன்படி சைதாப்பேட்டை வண்டிகாரன் தெரு, மசூதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். மழைக்காலத்தில் பாதிக்கப்பட்ட சாலைகளையும் சீர் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சிக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அடுத்த 4 மாதங்களில் சாலைகளைச் சீரமைக்கும் பணிகள் முழுவதும் நிறைவடையும்.

இன்று முதல்வர் ஆய்வின் போது கழிவுநீர் குடிநீரில் கலப்பதாகவும், தெரு நாய்களின் தொல்லை குறித்தும் புகார்கள் வந்தன. இது குறித்து நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு மழைக்காலத்திலும் சிறிய மழை பெய்தாலே நகரில் எந்தளவுக்கு நீர் தேங்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்த முறை அரசு எடுத்து தீவிர நடவடிக்கைகளால் எந்த இடத்திலும் பெரியளவில் மழை நீர் தேங்கவில்லை. வெள்ள பாதிப்புகளில் இருந்து சென்னை காக்க அரசுக்கு அதிகாரிகள் அனைவரும் உறுதுணையாக இருந்தனர். அப்படி உறுதுணையாக இருந்த அலுவலர்கள் அனைவருக்கும் வரும் 31ஆம் தேதி சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் தலைமையில் பாராட்டு விழா நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நீட் விலக்கு நீட் விலக்கு தொடர்பாகத் தமிழ்நாடு சட்டசபை இயற்றி அனுப்பிய தீர்மானம் குறித்த ஆயுஷ் அமைச்சகம் சில விளக்கங்களைக் கேட்டிருந்தது. அது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், “நீட் விளக்கு மசோதா குறித்து ஆயுஸ் அமைச்சகம் விளக்கம் கேட்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஓரிரு வாரத்திற்குள் விளக்கம் அனுப்பி வைக்கப்படும்” என்றார்.

முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு நடத்துவதால் சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகள் அனைவரும் ஆஜராகியிருந்தனர். சென்னை மேயர் ப்ரியா ராஜன் உட்பட மாநகராட்சி அதிகாரிகளும் அந்த ஆய்வில் பங்கேற்றனர். வீடு முதலமைச்சர் ஆய்வு நடத்தச் சென்ற மணப்பாக்கம் பகுதியில் தான் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இல்லமும் அமைந்திருந்தது. இதையடுத்து அவரது வீட்டுக்குச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பற்றி சில நிமிடங்கள் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின் போது காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் சஞ்சய் சம்பத்தும் உடனிருந்தார். ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்காக கைச் சின்னத்தில் வாக்குக் கேட்டு திமுக அமைச்சர்கள் பிரச்சாரத்தை தொடங்கியதற்காக உருக்கமுடன் நன்றி தெரிவித்துக் கொண்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன். இந்தச் சந்திப்பை முடித்துவிட்டு இன்னும் சில இடங்களுக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு எந்த அளவுக்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என்பதை நேரில் பார்த்து அறிந்துகொண்டார்.