மோடி பிறந்த பெருமைக்குரிய மாநிலம் குஜராத்: ஓ.பன்னீர்செல்வம்!

பொங்கல் விழாவிற்கு சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி பிறந்த பெருமைக்குரிய மாநிலம் குஜராத் என்று ஓ.பி.எஸ் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளதாக முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை தமிழக பாஜக தலைவர் அன்னாமலையை சந்தித்து ஆதரவு திரட்டினார். தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் திடீரென குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு இன்று காலையில் புறப்பட்டுள்ளார். அகமதாபாத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் அவர் பயணம் செய்துள்ளதாக கூறப்பட்டது. இவருடன் மனோஜ் பாண்டியன் உட்பட 3 பேர் பயணம் செய்தனர்.

இந்நிலையில், பொங்கல் விழாவிற்கு சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பொங்கல் விழாவில் கலந்துக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

குஜராத்தில் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கர்ணாவதி தமிழ் சங்கம் சார்பில் 6-வது பொங்கல் திருவிழா, மணிநகர் தொகுதியில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழகத்தின் முன்னாள் முதலவர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். அவருடன் பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரும் பங்கேற்றனர். குத்து விளக்கு ஏற்றி பொங்கல் விழாவை ஓபிஎஸ் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மணிநகர் தொகுதியை சேர்ந்த ஏராளமான தமிழர்களும் குடும்பத்துடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் முதல் கட்டமாக பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து மாடுகள் வழிபாடு நிகழ்ச்சி, கும்மி அடித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலையில் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறியது. குஜராத் வாழ் தமிழர்களுடன் தமிழ் மாணவ – மாணவிகள் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தமிழர் பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளை ஓ பன்னீர் செல்வம் உள்பட சிறப்பு விருந்தினர்கள் கண்டு ரசித்தனர்.

தொடர்ந்து குஜராத் வாழ் தமிழர்களுடன் ஓ பன்னீர்செல்வம் கலந்துரையாடினார். மேடையில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “விட்டு கொடுத்தவர்கள் கெட்டுப்போவதில்லை என்பதற்கு குஜராத் வாழ் தமிழர்கள் உதாரணம். குஜராத் மாநிலம் புனிதமானது. மகாத்மா காந்தியை பெற்றெடுத்த மண் குஜராத். பிரதமர் மோடி பிறந்த பெருமைக்குரிய மாநிலம் குஜராத்” என்று கூறினார்.

குஜராத்தில் உள்ள மணிநகர் தொகுதியில் சுமார் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். மேலும் மணிநகர் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது 2 முறை போட்டியிட்டு வென்ற தொகுதியும் ஆகும். அங்கு பாஜகவின் முக்கிய தலைவர்களைச் சந்தித்து, இடைத்தேர்தலில் ஆதரவு கோர இருப்பதாகக் கூறப்படுகிறது.