சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியதற்கான ஆதாரம் இல்லை: திக்விஜய சிங்

பாகிஸ்தானுக்கு எதிராக சர்ஜிகல் தாக்குதல் நடத்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி புல்வாமா என்ற இடத்தில் துணை ராணுவப் படையினர் வந்த பேருந்து மீது, பயங்கரவாதி ஒருவர் தனது வாகனத்தை மோதி வெடிக்கச் செய்ததில் வாகனத்தில் பயணித்த 44 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் இயங்கி வந்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில், அந்த பயிற்சி முகாமும் அங்கிருந்த பயங்கரவாதிகளும் அழிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அதிக பெரும்பான்மையுடன், தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆட்சி அமைத்தது.

இந்தநிலையில் சர்ஜிகல் தாக்குதல் நடத்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார். ஜம்முவில் உள்ள சத்வாரி சவுக்கில் இந்திய ஒற்றுமை பயணத்தின் போது பேசிய காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் கூறியதாவது:-

முதலில் ரஜோரியின் ரோங்கிரி மற்றும் ஜம்முவின் நர்வால் பகுஹ்டியில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370 நீக்கப்பட்டபோது பரப்பப்பட்டது போன்று ஜம்மு-காஷ்மீர் சூழ்நிலை இல்லை. இலக்கு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கொலைகள் மற்றும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் மீண்டும் தொடங்கியுள்ளது.

புல்வாமா தாக்குதலின்போது, வீரர்கள் விமானம் மூலம் சிகிச்சைக்கு மாற்று இடத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டுமென சிஆர்பிஎப் அதிகாரிகள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், பிரதமர் மோடி அதை மறுத்துவிட்டார். அதனோடு ஒவ்வொரு வாகனமும் சோதனை செய்யப்படுகிறது. பிறகு ஏன் ராணுவ வாகனத்தின் மீது மோதிய ஸ்கார்பியோ வாகனத்தை சோதனை செய்யவில்லை. அதனால் தான் 40 ராணுவ வீரர்கள் பலியாகினர். எப்படி இவ்வாறான பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது? புல்வாமா தாக்குதல் குறித்த அறிக்கை இதுவரை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. அதேபோல் சர்ஜிகல் தாக்குதல் நடத்தியதாக ஒன்றிய பாஜக அரசு கூறுகிறது. ஆனால், அதற்கான ஆதாரத்தை இதுவரை தாக்கல் செய்யவில்லை. ஒன்றிய பாஜக அரசு பொய்களை மட்டுமே கூறி வருகிறது. பாஜக அரசு இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வெறுப்பை மட்டுமே பரப்புகிறது. அதை தவிர இங்கு வேறு எந்த வேலையும் செய்ய அரசு விரும்பவில்லை.

பாஜக அரசு இங்குள்ள பிரச்னையை தீர்க்க விரும்பவில்லை. காஷ்மீர் ஃபைல்ஸ் போன்ற திரைப்படங்கள் தொடர்ந்து தயாரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே, இந்தப் பிரச்சனையை நிரந்தரமாக்க பாஜக விரும்புகிறது. புல்வாமா சம்பவம் அரசின் தவறு. புல்வாமா பதற்றமான பகுதி என்பது அரசுக்கு தெரியும். பிறகு ஏன் ராணுவ வீரர்களை காஷ்மீருக்கு விமானம் மூலம் அனுப்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.