கேரளாவில் தனியார் பள்ளியில் 2 மாணவர்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு!

கேரள மாநிலம் கொச்சி காக்கநாட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலருக்கு திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டது. இதில் சில மாணவர்களின் பெற்றோருக்கு நோரா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் கொச்சி காக்கநாட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலருக்கு திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் சுகாதாரத்துறையினர் அங்கு சென்று ஆய்வு நடத்தினர். இதில் சில மாணவர்களின் பெற்றோருக்கு நோரா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இவர்கள் மூலம் மாணவர்களுக்கும் நோரா வைரஸ் பரவி இருக்கலாம் என தெரியவந்தது. இதையடுத்து பள்ளியில் நோய் அறிகுறியுடன் காணப்பட்ட 62 மாணவர்களின் ரத்த மாதிரிகளை சுகாதாரத்துறையினர் சேகரித்தனர். அவை பொது சுகாதார ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் 2 மாணவர்களுக்கு நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாக சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் அந்த மாணவர்களின் பெற்றோரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

இதற்கிடையே நோரா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும் கொச்சி பகுதியில் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். நோரா வைரஸ் அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவு மூலமே பரவுகிறது என்று டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர். இதனால் பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். வீடுகளில் குளோரின் கலந்த குடிநீரையே பயன்படுத்தவேண்டும், பழங்கள், காய்கறிகளை பயன்படுத்தும் முன்பு நன்கு கழுவி பயன்படுத்த வேண்டும், விலங்குகளுடன் பழகும்போது கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.