டெல்லி ஜாமியா பல்கலையில் இன்று மோடி குறித்த ஆவணப்படம்!

ஜே.என்.யூ. பல்கலைக் கழகத்தைத் தொடர்ந்து டெல்லி ஜாமியா பல்கலைக் கழகத்தில் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. இதனையடுத்து டெல்லி ஜாமியா பல்கலைக் கழகப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

2002-ம் ஆண்டு குஜராத் மதவன்முறைகளை மையமாக வைத்து India: The Modi Question என்ற தலைப்பில் பிபிசி ஊடகம் 2 தொகுதி ஆவணப் படங்களை உருவாக்கி உள்ளது. இந்த ஆவணப் படங்கள், பிரதமர் மோடிக்கு எதிராக இருக்கிறது என்பது சர்ச்சை. இதனால் பிபிசியின் ஆவணப் படங்களை மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடைக்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மோடி ஆவணப் படத்தை பல இடங்களில் காங்கிரஸ், இடதுசாரிகள் திரையிட்டு வருகின்றனர். இதனால் பல மாநிலங்களில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் சகோதரத்துவ இயக்கம் என்ற பெயரிலான மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள், பிபிசி ஆவணப்படத்தை பல்கலைக்கழகத்தில் திரையிட்டனர். இதுதொடர்பான போட்டோக்கள் இணையதளங்களில் வெளியானது. இது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதுபற்றி பல்கலைக்கழக பதிவாளர் டேவிஸ் நிகம் கூறுகையில், ‛‛Fraternity Movement எனும் மாணவர்கள் அபை்பு பிபிசி ஆவணப்படத்தை வடக்கு கேம்பஸில் உள்ள ஷாப்பிங் காம்பளக்சில் எவ்வித அனுமதியின்றி திரையிடப்பட்டுள்ளது. இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பல்கலைக்கழகம் சார்பில், ‛‛பிபிசி ஆவணப்படத்தை திரையிடும் முன்பு அதிகாரிகளிடம் மாணவர் அமைப்பினர் அனுமதி எதுவும் கோரவில்லை. பல்கலைக்கழக பதிவாளரிடம் ஏபிவிபி அமைப்பினர் புகார் தெரிவித்த பிறகு தான் விஷயம் தெரியவந்தது. இதுபற்றி பல்கலைகழக பாதுகாப்பு பிரிவினரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது” என கூறப்படுகிறது.

இதேபோல் டெல்லி ஜே.என்.யூ.விலும் மோடி குறித்த இந்த ஆவணப்படம் பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாக இடதுசாரி, வலதுசாரி மாணவர் குழுக்களிடையே கடும் மோதல்கள் வெடித்தன. ஜே.என்.யூ. பல்கலைக் கழக வளாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆனாலும் தடையை மீறி ஆவணப்படங்களை மாணவர்கள் செல்போன் மூலம் ஒளிபரப்பினர்.

டெல்லி ஜேஎன்யூவைத் தொடர்ந்து ஜாமியா பல்கலைக் கழகத்தில் இன்று மாலை 6 மணிக்கு மோடி ஆவணப்படம் திரையிடப்படுகிறது. இதற்கு பல்கலைக் கழக நிர்வாகம் அனுமதி தரவில்லை. இதனால் டெல்லி ஜாமியா பல்கலைக் கழக பகுதியிலும் பெரும் பதற்றம் நிலவுகிறது.