உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அண்மையில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிடப்பட வேண்டும் என்றார். மகாராஷ்டிரா- கோவா வழக்கறிஞர்கள் சங்க நிகழ்ச்சியில் பேசுகையில் தலைமை நீதிபதி சந்திரசூட் இந்த கருத்தை தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மாநில மொழிகளில் வழங்குவது குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி திரு டிஒய் சந்திரசூட் தெரிவித்த இந்த யோசனையைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.
இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியதாவது:-
நாட்டில் தற்போது சட்டங்கள் ஆங்கிலத்தில் உள்ளன. இதனை 99% மக்கள் எளிதாக புரிந்து கொள்ள முடியவில்லை. மாநிலங்களின் மக்கள் தாங்கள் என்ன மொழியில் பேசுகிறார்களோ அந்த மொழியில் சட்டங்களை புரிந்து கொள்ள வேண்டும். இந்தி, தமிழ், குஜராத்தி, ஒடியா ஆகிய 4 மொழிகளில் முதல் கட்டமாக உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்பட உள்ளது. இதற்காக நீதிபதி ஓகா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ், என்.ஐ.டி. தர்மிஸ்தா, டெல்லி ஐ.ஐ.டி. மித்தேஷ் கப்தா, ஏக்.ஸ்டெப் பவுண்டேசன் விவேக் ராகவன், சுப்ரியா சங்கரன் ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.