பரந்தூர் விமான நிலைய திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி 4-வது முறையாக கிராம சபை கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் அடுத்த கட்டமாக 2-வது விமான நிலையம் அமைக்க பரந்தூர் சுற்று வட்டார கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் பரந்தூர் உட்பட 13 கிராமங்களில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு புதிய விமான நிலையம் உருவாக்கப்பட உள்ளது. இதுதான் பரந்தூர் விமான நிலையம் கட்டமைப்புக்கான பணிகளை தொடங்குவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால் பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு அரசின் அமைசர்களும் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கின்றனர். ஏற்கனவே 3 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்ட போதும் பரந்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக தொழில்நுட்ப பொருளாதார அறிக்கையை தயார் செய்ய தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் ஒப்பந்த புள்ளிகள் கோரியது. இதனால் பரந்தூர் கிராம மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். அப்போது அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் தமிழ்நாட்டு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தற்போது 4-வது முறையாக குடியரசு தினத்தை முன்னிட்டு நடந்த கிராம சபை கூட்டத்திலும் விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்தும் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டு வேளாண்மைத் தொழிலையும், விவசாயிகளையும், குடியிருப்புகளையும், விவசாய நிலங்களையும், நீர்நிலைகளையும் குறிப்பாக நமது ஏகனாபுரம் கிராமத்தை முழுமையாக அழித்து நிறைவேற்றப்படவுள்ள பரந்தூர் பசுமை விமான நிலையத்தை எந்தவொரு வடிவத்திலும் ஏற்றுக்கொள்வது இல்லை என்பதோடு மாநில அரசு இத்திட்டத்தை கைவிட வேண்டும் எனவும், அதற்கான அறிவிப்பை மாநில அரசு வெளியிட வேண்டும் எனவும் இந்த கிராம சபைக் கேட்டுக்கொள்கிறது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என முழுமையாக கைவிட வேண்டும் என்று இந்த கிராம சபையில் 4-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இவ்வாறு பரந்தூர் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.