74வது குடியரசு தின விழாவில் பெண்களை மையப்படுத்திய தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி அணிவகுத்தது.
1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் இந்தியா ஆங்கிலேயர்களை வெளியேற்றி விடுதலை பெற்றது. இதனைத் தொடர்ந்து 1950 -ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி தான் நமது தேசத்துக்கான அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு அது நடைமுறைக்கு வந்து இந்தியா முழுமையான குடியரசு நாடாக உருவெடுத்தது. இதனையே குடியரசு தின விழாவாக நாடு முழுவதும் கொண்டாடுகிறோம். அந்த வகையில் இன்றை தினம் நாட்டின் 74வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், ஜனாதிபதி திரெளபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றினார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களின் அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு சார்பில் சங்க காலம் தொட்டு சமூக வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் உதவிய சாதனை பெண்களை போற்றும் வகையில் கரகாட்டம், கர்நாடக சங்கீத இசையுடன் அலங்கார ஊர்தி பங்கேற்றது. தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தியில் ஆத்திச்சூடியை இயற்றிய ஒளவையார், ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரத்துடன் போராடிய வீர மங்கை வேலு நாச்சியார் ஆகியோரின் உருவங்கள் அலங்கார ஊர்தியில் இடம்பெற்று இருந்தன.
அதேபோல் அலங்கார ஊர்தியின் மையப்பகுதியில் கர்நாடக இசை பாடகியான எம்.எஸ்.சுப்புலட்சுமி, பரத நாட்டிய கலைஞர் பால சரஸ்வதி, தமிழ்நாட்டின் முதல் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்த அம்மையார், வேளாண் துறையில் சாதித்து வரும் பாப்பம்மாள் ஆகியோரின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் தமிழ்நாட்டின் பெருமையான தஞ்சை பெரிய கோவிலின் மாதிரி வடிவம் அலங்கார ஊர்தியின் பின்பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. அதேபோல் அலங்கார ஊர்தியில் கொம்பு, மேளம், நாதஸ்வரம், தவில், புல்லாங்குழல் வாசித்தபடி இசைக் கலைஞர்கள் வாசித்தனர். அவர்களோடு கரகாட்ட கலைஞர்களும் ஆடி சென்றனர்.