பட்டியல் இனத் தலைவரைத் தேசியக் கொடி ஏற்றவிடாமல் தடுத்த சம்பவத்துக்கு பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளிய திமுக ஆட்சியில் பட்டியல் இன ஊராட்சி மன்றத் தலைவா்களான சகோதர சகோதரிகள், தேசியக் கொடி ஏற்ற விடாமல் தடுக்கும் அவலம், தொடா்ந்து நிகழ்வதுடன், அவா்களின் அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது. காஞ்சிபுரம் திருப்புக்குழி ஊராட்சித் தலைவா், சுகுணா தேவேந்திரனை திமுகவின் தூண்டுதலினால் குடியரசு தினத்தன்று தேசியக் கொடி ஏற்ற விடாமல் தடுத்திருக்கின்றனா்.
கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ஊராட்சி மன்றத் தலைவரை கொடியேற்ற விடாமல் தடுத்து, தமிழக பாஜக தலையிட்டதால், கொடியேற்ற அனுமதித்தனா். இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள், தமிழகம் முழுவதும் நடந்தேறுகின்றன. சமூகநீதி பேசிக்கொண்டே அதைக் காற்றில் பறக்கவிடும் திமுகவின் பகல் வேஷம், தொடா்ந்து கலைந்து கொண்டிருக்கிறது. பட்டியல் இன மக்களுக்கு எதிரான குற்றங்களைக் கண்டும் காணாமல் இருக்கும் தமிழக முதல்வரின் மௌனம் அவலத்தின் உச்சம். இவ்வாறு அவர் கூறியுள்ளாா்.