இரட்டை இலையை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு!

இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு வழங்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்துள்ளது.

அதிமுக பொதுக்குழு வழக்கில் கிளைமேக்ஸ் நெருங்கிவிட்டது. இந்த பொதுக்குழு வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் மேல்முறையீடு வழக்கு ஆகும். அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி கூடியது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார்.

இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டன. அதோடு இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்டார். இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர். இதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமியும் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ் வாதம், ஓபிஎஸ் ஆதரவாளர் வைரமுத்து வாதம், எடப்பாடி பழனிசாமி வாதம், அதிமுகவின் பொது வாதம், அவைத்தலைவர் தமிழ் மகன் வாதம் என்று வரிசையாக கட்சியின் வாதங்கள் எல்லாம் முடிவிற்கு வந்துள்ளன. இனி வழக்கில் தீர்ப்பு மட்டுமே வழங்கப்பட வேண்டும். இன்னும் சில நாட்களில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் ஒருவரை களமிறக்க உள்ளது. அதேபோல் ஓ பன்னீர்செல்வம் தரப்பும் ஒரு வேட்பாளரை களமிறக்கும் போட்டிக்கு வேட்பாளரை களமிறக்க போவதாக அறிவித்து உள்ளது. இதனால் சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதிமுக சார்பாக இரண்டு பேருமே வேட்பாளரை களமிறக்கி தாங்கள்தான் அதிமுகவின் வேட்பாளர் என்று கூறினால் சின்னம் முடங்கும் நிலை ஏற்படும். அதேபோல் தற்போது தேர்தல் ஆணைய ஆவணங்களில் ஓ பன்னீர்செல்வம்தான் ஒருங்கிணைப்பாளர். எடப்பாடி பழனிசாமிதான் இணை ஒருங்கிணைப்பாளர். இந்த நிலையில் அதிமுகவில் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றால் பி பார்மில் இருவரும்தான் கையெழுத்து போட வேண்டும்.

இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இன்று முக்கிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி அமர்வில் எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கையில், ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கியதை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். அதிமுக பொதுக்குழு மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும். இடைத்தேர்தலில் எங்கள் சார்பில் வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம். ஆனால் தேர்தல் ஆணையம் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்தை ஏற்க மறுக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமி தரப்பு அவரது கையொப்பத்தோடு அனுப்பும் வேட்பாளர் பட்டியலை ஏற்க மறுக்கிறது. எங்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும், எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்க வேண்டும், என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தேர்தல் எப்போது? மனு தாக்கல் செய்ய கடைசி நாள் எப்போது? என்று கேட்டனர். இதையடுத்து பிப்ரவரி 7ம் தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாள். பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் என்று எடப்பாடி தரப்பு குறிப்பிட்டது. இதனால் வழக்கில் வேகமாக விசாரிக்க வேண்டும் என்று எடப்பாடி தரப்பு கோரிக்கை வைத்தது. இதையடுத்து பதில் அளித்த நீதிபதிகள், வழக்கில் திங்கள் கிழமை மனுதாக்கல் செய்யுங்கள். தேர்தலுக்கு முன்பாக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வழங்க முடியுமா என்று பார்க்கிறோம். தீர்ப்பு தாமதமாகும் பட்சத்தில் இடைக்கால நிவாரணம் வழங்க முடியுமா என்று பார்க்கிறோம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டு உள்ளனர்.