வேங்கைவயல் விவகாரம் குறித்து பாஜக ஏன் வாய் திறக்கவில்லை: திருமாவளவன்

வேங்கைவயல் பிரச்சனையில் பாஜக இதுவரை வாய் திறக்கவில்லை. ஆறுதல் சொல்லக்கூட தயாராக இல்லை என்று விசிக திருமாவளவன் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரியும், சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடிக்கவும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சார்பில் கோரிக்கைகளும் வைக்கப்பட்டன.இதையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து வெள்ளனூர் போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த விசாரணை நடந்தும்கூட, ஒருத்தரும் கைது செய்யப்படவில்லை. அதனால், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு கடந்த ஜனவரி 14-ம் தேதி மாற்றியது. இப்போதைக்கு 60 பேரிடம் இதுகுறித்த விசாரணை நடந்து முடிந்துள்ளது. விசாரணையில் கிடைக்கும் தகவல்களை முடிந்தவரை அறிவியல் தொழில்நுட்பத்துடன் பொருத்திப் பார்த்து, உறுதி செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

வேங்கைவயல் பிரச்சனையில் பாஜக இதுவரை வாய் திறக்கவில்லை. ஆறுதல் சொல்லக்கூட தயாராக இல்லை. அவர்களது பாஷையில் பாதிப்பிற்குள்ளானவர்கள் இந்துக்கள் தான்.. ஆனால் அமைதியாக இருக்கிறார்கள்.. அவர்கள் தான் சாதியவாதிகள். இதனை எதிர்த்து போராடுபவர்களுக்கு சாதியவாத முத்திரை குத்துவது திரிபுவாத முயற்சி. வேங்கைவயல் சம்பவத்தில் இதுவரை யாரையும் கைது செய்யாதது அதிர்ச்சி அளிக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனத்தையும் வருத்தத்தையும் பதிவு செய்துள்ளது. தமிழக அரசு இதில் உறுதியாக இருந்து உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது. எதிர்க்கட்சிகளாக இருக்கும் யாரும் இதைப் பற்றி பேசவில்லை. எந்த நோக்கத்திற்காகவோ தெரியவில்லை. யாருக்கு அச்சப்படுகிறார்களோ தெரியவில்லை. உண்மையிலேயே மனிதாபிமானம் இருக்கிறதா இல்லையா என்று ஐயப்படக்கூடிய வகையில் உள்ளது.

பட்டியல் சமூகத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை குடியரசுத் தலைவராக அமரவைத்தோம் என பெருமை பேசுகிறார்கள். ஆனால் இந்தியா முழுவதும் வன்கொடுமை தலைவிரித்தாடுகிறது. புதிய குடிநீர்த் தொட்டி கட்டுவதற்கு ஏற்கனவே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். பொதுவான குடிநீர்த் தொட்டியில் இருந்தே மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும். மக்களுக்கு தனியே குடிநீர்த் தொட்டியைக் கட்டக்கூடாது என்பதை துவக்கத்தில் இருந்தே விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக வேங்கைவயல் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசியிருந்தார் நாம் தமிழர் கட்சி சீமான். அப்போது, வேங்கைவயல் விவகாரத்தில், அரசியல் கட்சிகள் அவ்வளவாக எதிர்ப்பை பதிவு செய்யவில்லை என்று திருமாவளவன் சொல்லியிருக்கிறாரே, என்று செய்தியாளர்கள், சீமானிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு சீமான் கூறியதாவது:-

அதை என் அண்ணன் திருமாவளவன் சொல்லக்கூடாது. பிறகட்சிகளை குற்றம் சொல்ல இவருக்கு எந்த தகுதியுமில்லை. ஓட்டு வங்கி அரசியலுக்காக திட்டமிட்டே தமிழக அரசு குற்றவாளிகளை கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த சம்பவம் நடந்து 30 நாள் ஆகிறது. இதுவரையில் காவல்துறையும், சிபிசிஐடியும் ஏன் குற்றவாளிகளை கைது செய்யவில்லை. இந்த விவகாரத்தில் பிற கட்சிகளை குற்றம் சொல்ல திருமாவளவனுக்கு தார்மீக அடிப்படையில் தகுதியில்லை. அவர் கூட்டணியில் இருக்கும் கட்சி முதல்வரிடம் ஏன் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பவில்லை? முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து போராட்டம் நடத்துவாரா? அல்லது நான் முன்னெடுத்த இதுபோன்ற பல பிரச்சனைகளுக்கு அவர் எங்களுடன் களத்தில் இதுவரை நின்றாரா? நான் மட்டும் முதலமைச்சராக இருந்திருந்தால், இந்நேரம் இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை உடனே கைது செய்து ஜெயிலில் அடைத்திருப்பேன். பெரியார் மண், சமூக நீதிக்கான மாநிலம் என்று கட்டமைத்திருப்பது எல்லும் இந்த ஆட்சியாளர்களின் ஏமாற்று வேலை. இவ்வாறு சீமான் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.