ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா போட்டி!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து போட்டியிடுவதாக அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று ஈரோட்டில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளரை அறிவித்தார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் மேனகா என்பவர் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுவதாக சீமான் அறிவித்தார். இவர் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிமனை அலுவலகத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திறந்து வைத்தார். அப்போது அவர் வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:-

ஏழ்மை, வறுமை, ஊழல், லஞ்சம் ஆகியவற்றிற்கு யார் காரணம். வாக்குக்கு கையேந்தும் நிலைமையில்தான் மக்களை வைத்துள்ளார்கள். தலைவனை மக்கள் தேட வேண்டும். வழியில்லை என சொல்லக் கூடாது, வழியை உருவாக்க வேண்டும். ஆளும் கட்சிதான் இடைத்தேர்தலில் ஜெயிக்கும் என்பதெல்லாம் பிம்பம். இதை மக்கள் நினைத்தால் மாற்ற முடியும். இதனால் எந்த கட்சியாக இருந்தாலும் பிடிக்காவிட்டால் மக்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள். சந்துக்கு சந்து கணக்கெடுத்து காசு கொடுக்கிறார்கள்.

ஆவணப்படம் என்ன கற்பனையா, கேரளாவில் அரசு வெளியிடுகிறது. ஆனால் இங்கு அலைபேசியில் பார்ப்பவர்களை கூட கைது செய்துவிடுகிறார்கள். எல்ஐசியின் 30 சதவீத பங்குகள் விற்பனையாகிவிட்டன. பொது நிறுவனங்கள் அனைத்தும் தனியார்மயமாகிறது. கடந்த முறை 34 சதவீத மக்கள் வாக்குகளை செலுத்தவில்லை. இந்த முறை மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றால் மக்கள் வாக்கு செலுத்த வேண்டும். இந்த முறை ஈரோட்டில் 12 நாட்களுக்கு மேல் இருந்து தேர்தல் பணி செய்வேன். அரிசி பருப்புக்கு கூட ஜிஎஸ்டி போடப்படுகிறது. இனி வீடு கட்ட முடியாது. வரிதான் கட்ட முடியும்.

வடமாநிலத்தவர்கள் தாக்கியதாக வந்த வீடியோவை பார்த்து எனக்கு வியப்பில்லை. இவர்களால் அதை தடுக்க முடியாது. ஆனால் என்னால் முடியும். பெருந்துறை தொகுதியானது தற்போது மார்வாடிக்கள் இருக்கும் தொகுதியாகிவிட்டது. வடமாநிலத்தவர்களே தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் வடமாநிலத்தவர்கள்தான். சென்னையில் பிச்சை எடுப்பவர்களும் வடமாநிலத்தவர்தான். இதனால் பிச்சை எடுக்கும் வேலை கூட நமக்கு கிடைக்காது போல. இவ்வாறு சீமான் கூறினார்.