திராவிடத்தால் தமிழ் அழிந்தது. தமிழை தேடி பயணம் போக உள்ள ராமதாசுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் தேசிய செயலாளருமான எச்.ராஜா கூறியுள்ளார்.
கடலுாரில், இந்து மக்கள் கட்சி சார்பில் இரண்டு நாட்கள் சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழைத் தேடி யாத்திரை செல்ல ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். தமிழை தேடி யாத்திரை என்று சொன்னால் தமிழ் தொலைந்து விட்டது என்று தானே அர்த்தம். அதற்கு முன்னாள், தமிழை தொலைத்த திருட்டுப்பயல் யார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். திராவிடத்தால் தமிழ் அழிந்தது. தமிழை தேடி பயணம் போக உள்ள ராமதாசுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழை எங்கே தேடினால் கிடைக்கும் என்ற விவரத்தையும் அவரிடம் சொல்ல நான் உத்தேசித்துள்ளேன்.
ஈரோடு இடைத்தேர்தல் குறித்து வரும் 31ம் தேதி தேதி கூடும் பா.ஜ., மாநில மையக் குழுவில் முடிவு செய்யப்படும். தி.மு.க., சேதுசமுத்திர திட்டத்தை பற்றி பேசி இருகிறார்கள். இதற்கு ரூ. 27 ஆயிரம் கோடி செல்வாகும் என்கிறார். தமிழகத்திற்கு இதனால் என்ன மிச்சமாகும் என்பதை ஆராய வேண்டும். முதலில் நிபுணர் குழு போட்டு, சேதுசமுத்திர திட்டம் வரலாமா, வேணாமா என, முடிவெடுங்கள். எதிலும் ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது. இத்திட்டதால் ராமர் பாலத்திற்கு எந்த விதத்திலும் பாதிப்பு வரக்கூடாது என்பதுதான் எங்களது கருத்து. இவ்வாறு எச். ராஜா கூறினார்.