திருப்பூர் மாவட்டத்தில் இளைஞர்கள் சிலரை வடமாநில தொழிலாளர்கள் விரட்டுவது போல் வீடியோ வெளியான நிலையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக வடமாநில தொழிலாளர்கள் இருவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தின் அனுப்பர்பாளையம், ஆத்துப்பளையம், திருமுருகன்பூண்டி, வேலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பனியன் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பனியன் நிறுவனங்களில் ஒடிசா, ஜார்கண்ட், பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள், பணியாற்றி வருகின்றனர். தமிழர்களை விட, வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகம் பேர் பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் அனுப்பர்பாளையம் – வேலம்பாளையம் செல்லும் சாலையில் திலகர் நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள், தமிழ்நாடு இளைஞர்களை விரட்டி பெல்ட், கட்டை உள்ளிட்டவைகளை கொண்டு தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த வீடியோ தமிழ்நாடு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு நாம் தமிழர் கட்சியின் சீமான், தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கும் வீடியோ குறித்து வேலம்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், டீ கடையில் சிகரெட் புகைத்துக்கொண்டிருந்தபோது, வடமாநில தொழிலாளுக்கும், தமிழ்நாடு இளைஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வடமாநிலத் தொழிலாளர், தங்களுடன் பணி செய்யும் சக வட மாநில தொழிலாளர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் பெல்ட், உருட்டு கட்டை போன்ற ஆயுதங்களுடன் தாக்க வந்தது, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் திருப்பூரில் தமிழ்நாடு இளைஞர்களை வடமாநில தொழிலாளர்கள் தாக்கிய விவகாரத்தில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக வடமாநில தொழிலாளர்கள் இருவர் மீது சட்டவிரோதமாக கூடுதல், ஆயுதங்களுடன் ஒன்று கூடுதல், பொது இடத்தில் அவதூறாக பேசி பிரச்சினை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரஜத் குமார், பரேஷ்ராம் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.